Keadaan pesisir Pantai Morib.

கடல் பெருக்கு குறைந்த போதிலும் கடற்கரைகள் இன்னும் திறக்கப்படவில்லை

ஷா ஆலம், அக் 10- கடல் பெருக்கு காரணமாக கடல் நீர் கரைக்குள் நுழையும் சம்பவங்கள் குறைந்த போதிலும் கடற்கரைகள் மற்றும்  பொழுதுபோக்கு வசதிகள் இன்னும் பொதுமக்களுக்கு திறக்கப்படவில்லை.

பொதுமக்களின் பாதுகாப்பு கருத்தியும் விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்வதைத் தடுக்கவும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கோல லங்காட் மாட்ட மன்றத்தின் விரைவு நடவடிக்கை குழுவின் தலைவர் மஸ்லான் அப்துல் மானாப் கூறினார்.

நிலைமை தற்போது கட்டுப்பாட்டில் உள்ளதோடு கடல் பெருக்கும் குறைந்து வருகிறது. எனினும், கடற்கரைகள் இன்னும் பொதுமக்களுக்கு மூடப்பட்டுள்ளதோடு போலீசாரின் துணையுடன் ரோந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

கடல் பெருக்கு அபாயம் குறித்த தகவல் அறிந்து கடற்கரைகளுக்கு வருவதை தவிர்த்த பொதுமக்களுக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

தொடக்கத்தில் கடல் பெருக்கு குறித்த  தகவல் தெரியாததால் பலர் கடற்கரைகளில் குவியத் தொடங்கினர். எனினும், கடற்கரைகள் மூடப்பட்ட தகவல் தெரியவந்ததைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து அகன்றனர் என்றார் அவர்.

கடந்த நான்கு நாட்களாக கடல் கொந்தளிப்பு 5.6 மீட்டர் வரை உயர்ந்த நிலையில் இன்று அதன் அளவு 5.4 மீட்டராக இருந்தது என்று அவர் சொன்னார்.


Pengarang :