MEDIA STATEMENTNATIONAL

ஜே.பி.எஸ். பணியாளர்களை புண்படுத்திய விவகாரம்- மன்னிப்பு கோரினார் கணபதிராவ்

ஷா ஆலம், அக் 26- வடிகால் மற்றும் நீர்பாசனத் துறை (ஜே.பி.எஸ்.) பணியாளர்களை நோக்கி கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியதற்காக கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர்  வீ. கணபதிராவ் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார்.

இவ்விவகாரத்தில் தாம் தவறிழைத்துள்ளதை மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான அவர் ஒப்புக் கொண்டார்.

ஜே,பி.எஸ். அதிகாரிகளை கணபதிராவ் கடிந்து கொள்ளும் காணொளி சமூக ஊடகங்களில் பரவலானதைத் தொடர்ந்து இவ்விவகாரம் பல்வேறு தரப்பினரின் கண்டனத்திற்குள்ளானது.

நான் எனது கோபத்தை கட்டுப்படுத்த தவறி விட்டேன். மற்றவர்களின் மனதை புண்படுத்தும் வகையிலான வார்த்தைகளை நான் உதிர்த்திருக்கக்கூடாது. சம்பந்தப்பட்டத் தரப்பினரிடம் நான் திறந்த மனதுடன் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று கணபதிராவ் சொன்னார்.

எனது அதிகாரத்தை காட்ட வேண்டும் என்பதற்காகவோ ஹீரோவாக சித்தரிக்கப்பட வேண்டும் என்பதற்காகவோ நான் அவ்வாறு செய்யவில்லை. மக்கள் பிரதிநிதி என்ற முறையில் எனது கடமையைத்தான் ஆற்றினேன் என்றார் அவர்.

இங்குள்ள அரசு தலைமைச் செயலகத்தில் உள்ள தனது அலுவலகத்தில்  செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

கணபதிராவின் அந்த செயல் குறித்து தனது வியப்பை வெளிப்படுத்திய அரசாங்க ஊழியர்கள் தொழிற்சங்கமான கியூபெக்ஸ், அவரது நடவடிக்கை நிபுணத்துவம் இல்லாததை காட்டுகிறது எனக் கூறியது.

ஆட்சிக்குழு உறுப்பினரின் அந்த செயல் வரம்பு மீறியதாகவும் பணியில் உள்ள அரசு ஊழியர்களை தரம் தாழ்த்தும் வகையிலும் உள்ளதாக கியூபெக்ஸ் தலைவர் சாடியிருந்தார்.


Pengarang :