V Ganabatirau. Foto HAFIZ OTHMAN/SELANGORKINI

தாமான் ஸ்ரீ மூடாவில் வெள்ளத்தை தடுக்க வடிகால்கள் தரம் உயர்த்தப்படும்- கணபதிராவ்

ஷா ஆலம், அக் 26- இங்குள்ள செக்சன் 25, தாமான் ஸ்ரீ மூடாவில் வெள்ளத்தை தடுக்க கால்வாய் மற்றும் வடிகால் முறையை மேம்படுத்த   வடிகால் மற்றும் நீர் பாசனத் துறை (ஜே.பி.எஸ்.) இணக்கம் தெரிவித்துள்ளது. 

இத்திட்ட அமலாக்கத்தின் வழி இந்த பகுதியிலுள்ள 16,000 குடியிருப்பாளர்களுக்கு வெள்ளப் பிரச்சனையிலிருந்து விடிவு காலம் பிறக்கும் என்று கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ் கூறினார்.

இந்த திட்டப் பணிகள் அடுத்தாண்டு தொடங்கப்படும் எனக் கூறிய அவர், இதற்கான செலவினம் தற்போது மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாகச் சொன்னார்.

இந்த குடியிருப்பு பகுதியில் அடிக்கடி வெள்ளம் ஏற்படுவதற்கு மோசமான கால்வாய் அமைப்பு முறையே  காரணமாக உள்ளது. இந்த பிரச்சனையை களைவதற்கான நடவடிக்கையை ஜே.பி.எஸ். அதிகாரிகள் அடுத்தாண்டில் முன்னெடுப்பார்கள் என எதிர்பார்க்கிறேன் என்றார் அவர்.

இங்குள்ள மாநில அரசு தலைமைச் செயலகத்திலுள்ள தமது அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த வெள்ளப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு ஏதுவாக தாமான் ஸ்ரீ மூடா பகுதியிலுள்ள திடல் ஒன்றில் நீர் சேகரிப்பு குளத்தை அமைக்க ஷா ஆலம் மாநகர் மன்றம் திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் சொன்னார்.

இரு வாரங்களுக்கு முன்னர் முன்வைக்கப்பட்ட இந்த பரிந்துரையை ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் டத்தோ பண்டார் டத்தோ ஜமானி அகமது மன்சோர் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 


Pengarang :