வேலையில்லாதோர் எண்ணிக்கை செப்டம்பரில் 4.5 விழுக்காடாக குறைந்தது

கோலாலம்பூர், நவ 10- நாட்டில் வேலையில்லாதோர் விகிதம் கடந்த மாதங்களைக் காட்டிலும் தற்போது குறைந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்த எண்ணிக்கை 4.5 விழுக்காடாக அல்லது 729,000 பேராக பதிவாகியுள்ளது.

ஆள்பலத் துறையில் தேவை அதிகரித்து வரும் காரணத்தால் வேலையில்லாதோர் எண்ணிக்கை குறைந்து வருவதாக தேசிய புள்ளிவிபரத் துறையின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர்  முகமது உஸீர் மாஹிடின் கூறினார்.

பெரும்பாலான மாநிலங்கள் மீட்சி நிலைக்கான அடுத்தக் கட்டங்களை நோக்கிச் செல்லும் காரணத்தால் வர்த்தக நடவடிக்கைகள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்தோடு வர்த்தக நேரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது இதற்கு காரணமாகும் என்று அவர் சொன்னார்.

கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் எல்லை கடப்பதற்கான அனுமதி விரிவுபடுத்தப்பட்டது, திரங்கானு மற்றும் லங்காவியில் சுற்றுலா மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது போன்றவை பொருளாதார மீட்சிக்கு மேலும் வலுவூட்டியதாக அவர் குறிப்பிட்டார்.

இத்தகைய சாதகமான சூழ்நிலைகள் யாவும் ஆள்பலச் சந்தை மீண்டும் வலுப்பெறுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளன என்று நேற்று இங்கு வெளியிட்ட மலேசிய ஆள்பலம் மீதான புள்ளிவிபர அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத் துறைகளைப் பொறுத்த வரையில் சேவைத் துறை குறிப்பாக மொத்த, சில்லரை வணிகம், உணவு சேவை, தகவல் மற்றும் தொடர்பு சேவை ஆகியவை  தொடர்ந்து வளர்ச்சியைப் பதிவு செய்து வருகின்றன என்றார் அவர்.

தயாரிப்புத் துறை தொடர்ந்து சாதகமான முன்னேற்றத்தை பதிவு செய்து வரும் வேளையில் விவசாயம், சுரங்கத் தொழில், குவாரி போன்ற துறைகளில் மந்த நிலை காணப்படுகிறது என் அவர் சொன்னார்.


Pengarang :