ஏசான் பொருள்களின் விற்பனையை 2.3 கோடி வெள்ளி வரை உயர்த்த பி.கே.பி.எஸ். இலக்கு

கோலாலம்பூர், நவ 19- சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஓராண்டு காலத்தில் ஏசான் பெயர் கொண்ட உணவுப் பொருள்களின் விற்பனையை 2 கோடியே 30 லட்சம் வெள்ளி வரை அதிகரிக்க பி.கே.பி.எஸ். எனப்படும் சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகம் திட்டமிட்டுள்ளது.

அந்த உணவுப் பொருள் தொகுப்பு வரும் ஜனவரி முதல் பேரங்காடிகள், பி.கே.பி.எஸ். விற்பனை மையங்கள், மொத்த விற்பனை சந்தைகள் மற்றும் இணையத்தளம் வாயிலாக விற்கப்படும் என்று அக்கழகத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டாக்டர் முகமது கைரில்  முகமது ராஸி கூறினார்.

சுத்தம் செய்யப்பட்ட கோழி, அரிசி, சமையல் எண்ணெய், சீனி, மாவு, பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவை தங்களின் பிரதான விற்பனை பொருள்களாக விளங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது ஆண்டில் பொருள்களின்  விற்பனை மதிப்பை 2 கோடியே 30 லட்சம் வெள்ளியாகவும் அதற்கு அடுத்த ஆண்டில் 8 கோடியே 50 லட்சம் வெள்ளியாகவும் உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெற்று வரும் சிப்ஸ் எனப்படும் 2021 சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக உச்சநிலை மாநாட்டின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

இப்பொருள்களுக்கான சின்னத்தை அறிமுகம் செய்யும் நிகழ்வு சிலாங்கூர் ராஜா மூடா துங்கு அமீர் ஷா தலைமையில் நடைபெறும் எனக் கூறிய அவர், சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியும் இந்நிகழ்வில் கலந்து கொள்வார் என்றார்.


Pengarang :