லுவாஸ் துரித நடவடிக்கை குழுவின் வழி 23 நீர் மாசுபாடு சம்பவங்கள் முறியடிப்பு 

உலு லங்காட், நவ 20- கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியத்தின் (லுவாஸ்) துரித நடவடிக்கை குழுவின் வாயிலாக 23 நீர் மாசுபாட்டு சம்பவங்கள் தடுக்கப்பட்டன.

இதன் வழி நீர் சுத்திகரிப்பு மையங்களை மூட வேண்டிய நிர்பந்தம் ஏற்படாவண்ணம் தடுக்கப்பட்டதாக அதன் இயக்குநர் ஹஸ்ரோல்நிஸாம் ஷஹாரி கூறினார்.

இம்மாதம் 9 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் இந்த நீர் மாசுபாடு சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டு தடுக்கப்பட்டன என்று அவர் சொன்னார்.

இந்த துரி நடவடிக்கையின் மூலம் நீர் விநியோக நடவடிக்கையில் எந்த பாதிப்பும் ஏற்படாமலிருப்பது உறுதி செய்யப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

இருபத்து நான்கு உறுப்பினர்களைக் கொண்டு இந்த லுவாஸ் விரைவு நடவடிக்கை குழு சுத்திகரிக்கப்படாத நீர் நிலைகளில் மாசுபாடு ஏற்படாமலிருப்பதை உறுதி செய்ய 24 மணி நேர கண்காணிப்பு பணிகளை  மேற்கொண்டு வருகிறது என்று அவர் கூறினார்.

முன்பு, புகார் கிடைக்கப்பெறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு கண்காணிப்பு குழு சென்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இந்த குழு ஷா ஆலமிலிருந்து செயல்படுவதால் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் செல்வதில் அதிக நேரம் பிடித்தது என்றார் அவர்.

ஆனால், தற்போது இந்த குழு உறுப்பினர்கள் களத்திலேயே உள்ளதால் பிரச்சனைக்குரிய இடங்களில் உடனடியாக நீரின் மாதிரியை சோதனை செய்வதற்குரிய சாத்தியம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இதர துறைகளுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக நீர் சுத்திகரிப்பு மையங்களை மூடப்படுவது தவிர்க்கப்பட்டுள்ளதோடு நீர் விநியோகத்தில் இடையூறு ஏற்படாமலிருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அவர் மேலும் சொன்னார்.


Pengarang :