மலாக்கா தேர்தல்- வெ.120,000 அபராதத் தொகையை உள்ளடக்கிய 9 குற்றப்பதிவுகள் வெளியிடப்பட்டன

மலாக்கா, நவ 22- மலாக்கா தேர்தலின் போது பல்வேறு குற்றங்களைப் புரிந்ததற்காக தேர்தலில் போட்டியிட்ட பல அரசியல் கட்சிகளுக்கு 120,000 வெள்ளியை உள்ளடக்கிய ஒன்பது குற்றப்பதிவுகள் வெளியிடப்பட்டன.

இம்மாதம் 8 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் இக்குற்றப்பதிவுகள் வெளியிடப்பட்டதாக மலாக்கா மாநில போலீஸ் தலைவர் டத்தோ அப்துல் மஜிட் முகமது அலி கூறினார்.

இது தவிர, இக்காலக்கட்டத்தில் 1988 ஆம் ஆண்டு தொற்று நோய் கட்டுப்பாட்டுச் சட்டம் மற்றும் 1954 ஆம் ஆண்டு தேர்தல் குற்றச் சட்டம் (சட்டம் 342) ஆகியவற்றின் கீழ் 37 குற்றப்பத்திரிகைகள் திறக்கப்பட்டதாகவும் அவர் சொன்னார்.

கோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை (எஸ்.ஒ.பி.) மீறியதற்காக 342 வது சட்டத்தின் கீழ் 19 குற்றப்பத்திரிக்கைகள் திறக்கப்பட்டன. இதர 18 குற்றப்பத்திரிகைகள் 1954 ஆம் ஆண்டு தேர்தல் குற்றச் சட்டத்தின் கீழ் திறக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.

தேர்தல் நடைமுறையின் வழி ஜனநாயகத்தை நிலை நாட்டும் அதே வேளையில் பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் தேர்தலின் போது எஸ்.ஒ.பி. விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அரசியல் உணர்ச்சிகளுக்கு முன்னுரிமை அளிக்காமல் பொது சுகாதாரத்திற்கும் பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் அளித்த மலாக்கா மாநில மக்களை தாம் பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.


Pengarang :