சுற்றுலா மையங்களில் இணைய சேவையை அதிகரிக்க டூரிசம் சிலாங்கூர்-ஸ்மார்ட்செல் ஒத்துழைப்பு

ஷா ஆலம், டிச 8- பொது மண்டலங்கள் மற்றும் சுற்றுலா மையங்களில் அதிவிரைவான இணைய சேவையை ஏற்படுத்துவது மற்றும் மேம்படுத்துவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் டூரிசம் சிலாங்கூர் மற்றும் ஸ்மார்ட்செல் சென். பெர்ஹாட் நிறுவனம் ஆகியவை நேற்று கையெழுத்திட்டன.

இணைய தொடர்பு சேவைகளை அமைப்பது, சோதிப்பது மற்றும் தொடக்குவது  ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை நல்க இந்த ஒப்பந்தம் வகை செய்வதாக டூரிசம் சிலாங்கூர் தலைமை செயல்முறை அதிகாரி அஸ்ருள் ஷா முகமது கூறினார்.

தொலைத் தொடர்புக்கான அடிப்படை வசதிகளை நிர்மாணிப்பதற்கு தேவையான இடங்கள் மற்றும் வழிகளை ஏற்படுத்தித் தரும் பொறுப்பை டூரிசம் சிலாங்கூர் ஏற்கும் என்று அவர் சொன்னார்.

காமன்வெல்த் பொழுதுபோக்கு வனப்பகுதி, கஞ்சிங் பொழுதுபோக்கு வனப்பகுதி, சுங்கை சொங்காக் பொழுதுபோக்கு வனப்பகுதி, ஸ்ரீ பெர்க்காட் ஓய்வு இல்லம், பிரேசர் மலை ஆகிய பகுதிகள் மீது கவனம் செலுத்தப்படும். இதன் பின்னர் இத்திட்டம் கோல சிலாங்கூர் மற்றும் சிகிஞ்சான் பகுதிகளுக்கு விரிவாக்கம் காணும் என்றார் அவர்.

நேற்று இங்கு நடைபெற்ற ஸமார்ட்செல் நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் சடங்கிற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார். 

இங்குள்ள சுல்தான் சலாவுடின் அப்துல் அஜிஸ் ஷா கட்டிடத்தில் நடைபெற்ற இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் சடங்கு மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கலந்து கொண்டார்.


Pengarang :