சுங்கை துவா தொகுதியில் சமூக நலத் திட்டங்களுக்காக வெ.16,000 வழங்கப்பட்டது

கோம்பாக், டிச 12- சுங்கை துவா தொகுதி மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்தவதற்காக தொகுதி சேவை மையத்தின் வாயிலாக 16,000 வெள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.

கோம்பாக் மாவட்டத்திலுள்ள தேவாலயங்கள், பத்து கேவ்ஸ் எப்.சி. கால்பந்து குழு, கோவிட்-19 நோய்த் தொற்றால் பாதிக்கப்ட்டவர்களின் வாரிசுகள், இருதய மற்றும் நுரையீரல் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், மாணவர்கள் ஆகியோருக்கு இந்த நிதி பகிர்ந்தளிக்கப்பட்டதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த நிதியுதவித் திட்டம் தனது மாதாந்திர நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக அமைந்துள்ளதாக மாநில மந்திரி புசாருமான அவர் தெரிவித்தார்.

பொது மக்களின் விண்ணப்பத்தின் பேரில் இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது என்று இங்குள்ள தனது தொகுதி சேவை மையத்தில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, இந்த நிதியுதவிக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட கோம்பாக் மாவட்ட தேவாலயங்கள் சங்கத்தின் தலைவர் ரேவ் ஹென்ரி சந்தானம், மாநில அரசு வழங்கிய இந்த பத்தாயிரம் வெள்ளி மானியம் கிறிஸ்துமஸ் சமயத்தில் உதவி தேவைப்படும் 200 பேருக்கு அடிப்படை உணவுப் பொருள்கள் வழங்குவதற்கு பயன்படுத்தப்படும் எனக் கூறினார்.

மந்திரி புசார் அவர்கள் அடிக்கடி களத்தில் இறங்கி உதவி தேவைப்படும் மக்களுக்கு இன, சமய வேறுபாடின்றி இயன்ற உதவிகளை வழங்குவது பெரிதும் போற்றத்தக்கதாக உள்ளதாக அவர் சொன்னார்.

வெகு விரைவில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டவுள்ள நிலையில் கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட கிறிஸ்துவர்களுக்கு உதவிகளை வழங்க இந்த நிதி பெரிதும் துணை புரியும் என்றார் அவர்.

 


Pengarang :