ஞாயிற்றுக் கிழமைக்குள் கிள்ளான் பகுதியில் 45000 பேருக்கு உதவித் தொகை- மாவட்ட அதிகாரி இலக்கு

ஷா ஆலம், ஜன 6- வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 4,500 பேருக்கு வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் சிலாங்கூர் பங்கிட் (பி.எஸ்.பி.) திட்டத்தின் கீழ் 1,000 வெள்ளி உதவித் தொகை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நோக்கத்திற்காக அனைத்து பகுதிகளையும் சேர்ந்த உதவி பெறுவோரின் எண்ணிக்கையை கட்டங் கட்டமாக உயர்த்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கிள்ளான் மாவட்ட அதிகாரி முகமது பைசால் அப்துல் ராஜி கூறினார்.

நேற்று வரை 2,304 குடும்பங்கள் 23 லட்சத்து 4 ஆயிரம் வெள்ளி உதவித் தொகையை பெற்றுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

இன்று மட்டும் கம்போங் லொம்போங் பகுதியைச் சேர்ந்த 800 குடும்பங்களுக்கு உதவித் தொகை வழங்கினோம். இவர்களுக்கு கூடுதலாக மத்திய அரசின் பந்துவான் இவான் இசான் திட்ட உதவி நிதியும வழங்கப்பட்டது என்றார் அவர்.

இங்குள்ள கம்போங் லொம்போங் சமூக மண்டபத்தில் நடைபெற்ற நிதியளிப்பு நிகழ்வின் போது செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக மாநில அரசு பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் பத்து கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அடிப்படை வசதிகளை சரி செய்வதற்கும் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10,000 வெள்ளி மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 1,000 வெள்ளி வீதம் வழங்குவதற்கும் இந்த நிதி ஒதுக்கீடு பயன்படுத்தப்படும்.


Pengarang :