இவ்வாண்டு நோன்புப் பெருநாள் சந்தையை நடத்த அனுமதி- பிரதமர் தகவல்

கோலாலம்பூர், பிப் 13- இவ்வாண்டில் ரமலான் சந்தை உள்பட பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள தடை விதிக்கப்படாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறியுள்ளார்.

நோன்பு பெருநாள் சந்தைக்கான நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகள் (எஸ்.ஒ.பி.) தற்போது ஆராயப்பட்டு வருவதோடு நேரம் வரும் போது அது குறித்து அறிவிக்கப்படும் என்று அவர் சொன்னார்.

வர்த்தக நடவடிக்கையை மூட மாட்டோம் என நான் ஏற்கனவே கூறியுள்ளேன். நோன்புப் பெருநாள், ரமலான் சந்தை, இரவுச் சந்தை என எதுவாக இருந்தாலும் வழக்கம் போல் செயல்பட அனுமதிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

இன்று இங்கு மலேசிய குடும்ப சீனப்புத்தாண்டு விருந்து நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஒமிக்ரோன் வகை நோய்த் தொற்றின் தாக்கத்தால் கடந்த ஒரு மாத காலமாக கோவிட்-19 எண்ணிக்கை அபரிமித உயர்வு கண்டு வருவது தங்கள் வியாபாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று ரமலான் சந்தை வியாபாரிகள் அச்சம் தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

நாட்டில் நேற்று 22,802 கோவிட்- 19 சம்பவங்கள் பதிவானதைத் தொடர்ந்து இந்நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 30 லட்சத்தை எட்டியது.


Pengarang :