மீண்டும் உச்சம் தொட்டது கோவிட்-19 : நேற்று 32,467 பேர் பாதிப்பு

ஷா ஆலம், மார்ச் 4- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 32,467 ஆக அபரிமித உயர்வு கண்டது. கடந்த மாதம் 24 ஆம் தேதி மிக அதிகமாக 32,070 சம்பவங்கள் பதிவான நிலையில் நேற்று அதனையும் தாண்டி நோய்த் தொற்று எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டது.

நேற்று நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் 32,054 பேர் உள்நாட்டினராவர். எஞ்சிய 413 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள்.

தாக்கம் அதிகம் கொண்ட மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 231 ஆக (0.17 விழுக்காடு) பதிவாகியுள்ளது. நோய்க்கான அறிகுறி இல்லாத அல்லது லேசான அறிகுறிகளைக் கொண்ட ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 32,236 அல்லது 99.29 விழுக்காடாகும்.

மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள 231 நோயாளிகளில் 60 பேர் அல்லது 25.98 விழுக்காட்டினர் தடுப்பூசியை அறவே பெறாதவர்கள் அல்லது முழுமையாகப் பெறாதவர்கள் ஆவர். மேலும் 115 பேர் அல்லது 49.78 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்று ஊக்கத் தடுப்பூசியை இன்னும் பெறாமலிருக்கின்றனர். 56 பேர் அல்லது 24.4 விழுக்காட்டினர் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

இது தவிர, கடும் பாதிப்புக்குள்ளான நோயாளிகளில் 127 பேர் அல்லது 54.98 விழுக்காட்டினர் 60 வயதுக்கும் மேற்பட்டவர்களாக உள்ள வேளையில் 74 பேர் அல்லது 32.03 விழுக்காட்டினர் ஒன்றுக்கும் மேற்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடும் பாதிப்புக்குள்ளானவர்களில் கர்ப்பிணி பெண் ஒருவரும் அடங்குவார்.

நேற்று மொத்தம் 189 பேர் ஒன்றாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர். அவர்களில் 114 பேர் அல்லது 60.32 விழுக்காட்டினர் தடுப்பூசியை அறவே பெறாதவர்கள் அல்லது முழுமையாகப் பெறாதவர்கள் அல்லது  ஊக்கத் தடுப்பூசியைப் பெறாதவர்களாவர். மேலும் 38 பேர் அல்லது 20.11 விழுக்காட்டினர் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

தடுப்பூசியை முழுமையாகப் பெறாத மற்றும் இதற்கு முன்னர் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்படாதவர்களுக்கு நோய்த் தொற்று பரவுவதற்கான அபாயம் அதிகம் உள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

பிரிவு வாரியாக கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வருமாறு-

1 ஆம் பிரிவு- 9,292 சம்பவங்கள் (33.79 விழுக்காடு)

2 ஆம் பிரிவு- 18,019 சம்பவங்கள் (65.52 விழுக்காடு)

3 ஆம் பிரிவு- 71 சம்பவங்கள் (0.26 விழுக்காடு)

4 ஆம் பிரிவு- 38 சம்பவங்கள் (0.14 விழுக்காடு)

5 ஆம் பிரிவு- 80 சம்பவங்கள் (0.29 விழுக்காடு)


Pengarang :