HEALTHNATIONAL

நேற்றைய கோவிட்-19 சம்பவங்களில் 223 ஆபத்தான கட்டத்தைச் சேர்ந்தவை

கோலாலம்பூர், மார்ச் 10– நாட்டில் நேற்று பதிவான 30,246 கோவிட்-19 சம்பவங்களில் 223 மட்டுமே ஆபத்தான மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டத்தைச் சேர்ந்தவை என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

எஞ்சிய 30,023 சம்பவங்கள்  நோய்த் தொற்றுக்கான அறிகுறி இல்லாத மற்றும் லேசான அறிகுறி கொண்ட ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டத்தைச் சேர்ந்தவை என்று அவர் சொன்னார்.

நேற்று பதிவான தொற்றுகளுடன் சேர்த்து நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 37 லட்சத்து 11 ஆயிரத்து 199 ஆக உயர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

நோய்த் தொற்றிலிருந்து நேற்று 26,653 பேர் நேற்று குணமடைந்தனர். இதனுடன் சேர்த்து இந்நோய் தொற்றிலிருந்து முற்றாக விடுபட்டவர்களின் எண்ணிக்கை 33 லட்சத்து 67 ஆயிரத்து 542 ஆக உயர்ந்துள்ளது என்று அவர் அறிக்கை ஒன்றில் கூறினார்.

கடுமையான பாதிப்பைக் கொண்ட 223 நோயாளிகளில் 58 பேர் தடுப்பூசியை அறவே பெறாதவர்கள் அல்லது முழுமையாகப் பெறாதவர்களாவர்.  மேலும் 107 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்று ஊக்கத் தடுப்பூசியை இன்னும் செலுத்திக் கொள்ளாமலிருப்பவர்களாவர். எஞ்சிய 58 பேருக்கு ஊக்கத் தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டது என்றார் அவர்.

நேற்று பாதிக்கப்பட்டவர்களில் 120 பேர் 60 வயதுக்கும் மேற்பட்டவர்களாகவும்  53 பேர் ஒன்றுக்கும் மேற்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களாகவும் உள்ளனர்.

கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக நேற்று 1,929 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 734 பேர் மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பையும் 1,195  பேர் ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டப் பாதிப்பையும் எதிர்நோக்கியுள்ளனர்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் 388 பேர் அனுமதிக்கப்பட்டுள்ள வேளையில் அவர்களில் 225 பேருக்குச் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.


Pengarang :