SELANGOR

மக்கள் பரிவு விற்பனைத் திட்டத்திற்கு அமோக வரவேற்பு- வெ. 180,000 வெள்ளி பொருள்கள் விற்பனை

கோம்பாக், மார்ச் 15– சட்டமன்றச் சேவை மையங்கள் வாயிலாக மேற்கொள்ளப்படும் மக்கள் பரிவு விற்பனைத் திட்டத்தின் வழி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி இதுவரை 180,000 வெள்ளி மதிப்பிலான உணவுப் பொருள்கள் விற்கப்பட்டுள்ளன.

கோழி, முட்டை, இறைச்சி, மீன் உள்ளிட்ட உணவுப் பொருள்களுக்கு அனைத்துப் பகுதிகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

உதாரணத்திற்குக் கோழிக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. சில இடங்களில் 800 கோழிகள் வரை விற்பனையாகின்றன. இது வரை இத்திட்டத்தின் மூலம் 6,000 கோழிகள் விற்கப்பட்டுள்ளன என்று அவர்  தெரிவித்தார்.

ஒரு குடும்பத்திற்கு இரண்டு கோழிகள் என்ற அடிப்படையில் அந்த உணவுப் பொருளின் விற்பனையைக் கட்டுப்படுத்தியுள்ளோம். இந்த எண்ணிக்கைப்படி சுமார் 3,000 குடும்பங்கள் பயன்பெற்றுள்ளன என்று அவர் சொன்னார்.

மேலும் அதிகமான சட்டமன்றத் தொகுதிகளுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளதால் விற்பனையின் அளவும் தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

சுங்கை துவாவில் மக்கள் பரிவு விற்பனைத் திட்டத்தை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

தற்போது பட்டியலிடப்பட்டுள்ள மேற்கண்ட நான்கு உணவுப் பொருள்கள் தவிர்த்து சமையல் எண்ணெய், வெங்காயம், அரிசி போன்ற பொருள்களும் இத்திட்டத்தின் கீழ் விற்கப்படுவதாக அமிருடின் மேலும் தெரிவித்தார்.


Pengarang :