HEALTHNATIONAL

ஒமிக்ரோன் பரவல் விஷயத்தில் அலட்சியம் வேண்டாம்- பொதுமக்களுக்கு மருத்துவச் சங்கம் எச்சரிக்கை

கோலாலம்பூர், மார்ச் 27- தடுப்பூசியை இன்னும் பெறாத மூத்த குடிமக்களும் ஒன்றுக்கும் மேற்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் தங்களின் உயிரை பணயம் வைக்காமல் உடனடியாக கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு எதிராக முழு பாதுகாப்பைப் பெறும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

பெரும்பாலும் ஒமிக்ரோன் வகை கோவிட்-19 பெருந்தொற்று லேசான தாக்கத்தை ஏற்படுத்தினாலும் எல்லா சூழ்நிலைகளிலும் குறிப்பாக நோய்த் தடுப்பூசிச் சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இது சாதமாக இருக்கும் எனக் கூற முடியாது என்று மலேசிய மருத்துவச் சங்கத்தின் தலைவர் டாக்டர் கோ கார் சாய் கூறினார்.

தடுப்பூசி பெற்றவர்களுக்கும் கடுமையான பாதிப்பை இந்நோய்த் தொற்று ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளது. முதன்மை தடுப்பூசிகளைப் பெறாதவர்களுக்கு பாதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.

மூத்த குடிமக்களும் ஒன்றுக்கும் மேற்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் இனியும் தாமதிக்காமல் மருத்துவரின் ஆலோசனையைப் பெறும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்.

தடுப்பூசி பெறுவதற்காக தடுப்பூசி மையங்களுக்குச் செல்ல இயலாதவர்களுக்கு உதவும் நோக்கில் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் புரொடெக்ஹெல்த் திட்டத்தை தாம் பெரிதும் வரவேற்பதாக அவர் சொன்னார்.

இரண்டு டோஸ் சினோவேக் தடுப்பூசியைப் பெற்றவர்கள் தங்களின் நோய்த் தடுப்பு சக்தியை மேம்படுத்திக் கொள்வதற்கு ஊக்கத் தடுப்பூசியை பெறுவது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார்.


Pengarang :