5 முதல் 11 வயது வரையிலான 58,780 சிறார்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டது

கோலாலம்பூர், ஏப்ரல் 8: நாட்டில் சிறார்களுக்கான தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் மூலம் நேற்றுவரை 5 முதல் 11 வயதுக்குட்பட்ட மொத்தம் 58,780 பேர் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

கோவிட்நவ் இணையதளத்தின்படி, 13 லட்சத்து 54 ஆயிரத்து 514 குழந்தைகள் அல்லது 38.2 விழுக்காட்டினர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

12 முதல் 17 வயதுடைய இளையோரில், மொத்தம் 28 லட்சத்து 56 ஆயிரத்து 360 பேர் அல்லது 91.8 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாக பெற்றுள்ளனர், அதே நேரத்தில் 29 லட்சத்து 56 ஆயிரத்து 63 பேர் அல்லது 95 விழுக்காட்டினர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

இதற்கிடையில், மொத்தம் 1 கோடியே 58 லட்சத்து 99 ஆயிரத்து 713 பேர் அல்லது 67.6 விழுக்காட்டினர் பூஸ்டர் டோஸ் ஊசிகளைப் பெற்றனர், 2 கோடியே 29 லட்சத்து 55 ஆயிரத்து 772 பேர் அல்லது 97.6 விழுக்காட்டினர் இரண்டு டோஸ்களைப் முழுமையாக பெற்றுள்ளனர், 2 கோடியே 32 லட்சத்து 32 ஆயிரத்து 836 பேர் அல்லது 98.8 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றனர்.

3,721 முதல் டோஸ்கள், 15,374 இரண்டாவது டோஸ்கள் மற்றும் 10,639 பூஸ்டர் டோஸ்கள் என மொத்தம் 29,734 தடுப்பூசிகள் நேற்று வழங்கப்பட்டன, தேசிய COVID-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட ஒட்டுமொத்த டோஸ்கள் எண்ணிக்கை  6 கோடியே 91 லட்சத்து 01 ஆயிரத்து 615 ஆக உயர்ந்துள்ளது.


Pengarang :