30 மாணவர்களுக்கு கோவிட்-19: மூவார் எம்.ஆர்.எஸ்.எம். கல்லூரியை ஒரு வாரத்திற்கு மூட உத்தரவு

ஜோகூர் பாரு, ஏப் 10- முப்பது மாணவர்களுக்கு கோவிட்-19 பெருந்தொற்று கண்டதைத் தொடர்ந்து மூவாரிலுள்ள மாரா இளநிலை அறிவியல் கல்லூரி (எம்.ஆர்.எஸ்.எம்.) நேற்று தொடங்கி ஏழு நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டது.

அக்கல்லூரியை மூடும் உத்தரவை மூவார் மாவட்ட சுகாதார இலாகா நேற்று பிறப்பித்துள்ளதாக சுகாதாரம் மற்றும் ஒற்றுமைத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் லிங் தியான் சூன் கூறினார்.

கடந்த திங்கள்கிழமை முதல் கல்லூரியின் தங்கும் விடுதி நுழைவுக்கான பதிவு நடைபெற்று வரும் நிலையில் அப்பதிவு நடவடிக்கையின் மூன்றாவது நாளில் மேற்கொள்ளப்பட்ட கோவிட்-19 சோதனையின் போது 11 மாணவர்களுக்கு நோய்த் தொற்று கண்டிருப்பது உறுதி செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

ஐந்தாவது நாளில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு சோதனையில் மேலும் 19 மாணவர்கள் நோயினால் பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது என்று அவர மேலும் சொன்னார்.

மூவார் மாவட்ட சுகாதார இலாகாவின் உத்தரவின் பேரில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் பெர்னாமா செய்தி நிறுவனத்திடம் அவர் கூறினார்.

 


Pengarang :