ANTARABANGSAHEALTH

சிங்கப்பூரில் முதல் குரங்கம்மை சம்பவம் அடையாளம் காணப்பட்டது

சிங்கப்பூர், ஜூன் 22- சிங்கப்பூரில் குரங்கம்மை நோய் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் கூறியது. தென்கிழக்காசியாவில் பதிவு செய்யப்பட்ட முதலாவது சம்பவமான இது வெளிநாட்டினர் ஒருவரை பீடித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

ஜூன் மாத மத்தியில் சிங்கப்பூருக்கு வந்த விமானப் பணியாளரான 42 வயது பிரிட்டிஷ் பிரஜைக்கு இந்நோய் கண்டிருப்பது இம்மாதம் 20 ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் கண்டு பிடிக்கப்பட்டதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிக்கை ஒன்றில் கூறியது.

சிங்கப்பூர் தொற்று நோய் மருத்துவ மையத்தில் சிகிச்சைப் பெற்று வரும் அவ்வாடவரின் உடல் நிலை சீராக உள்ளதாக அமைச்சு தெரிவித்தது.

அந்நபருடன் தொடர்பில் இருந்த 13 பேர் கடந்த செவ்வாய்க்கிழமை வரை அடையாளம் காணப்பட்டுள்ள வேளையில் அவர்கள் அனைவரும் 21 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அந்த ஆடவருடன் விமானத்தில் பயணித்தவர்கள் மற்றும் அவர் சிங்கப்பூரில் தங்கியிருந்த போது தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது.

ஆகக் கடைசியாக மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் குரங்கம்மை நோய் சிங்கப்பூரில் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆஸ்திரேலியா முதல் குரங்கம்மை நோயை கடந்த மாதம் 20 ஆம் தேதி பதிவு செய்த வேளையில் இம்மாதம் 10 ஆம் தேதி அந்த எண்ணிக்கை எட்டாக உயர்ந்தது.

சுமார் 35 நாடுகளில் 2,500க்கும் மேற்பட்டவர்கள் இந்த குரங்கம்மை  நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Pengarang :