ECONOMYHEALTHNATIONAL

டுசுன் துவா தொகுதியில் இலவச மருத்துவ பரிசோதனை-  ஒரு மணி நேரத்தில் 200 பேர் பங்கேற்பு

உலு லங்காட், ஜூன் 26- உடலாரோக்கியம் மீதான விழிப்புணர்வு டுசுன் துவா சட்டமன்றத் தொகுதி மக்களிடையே மேலோங்கி காணப்படுகிறது. இன்று இங்கு நடைபெற்ற மாநில அரசின் இலவச மருத்துவப் பரிசோதனைத் திட்டத்திற்கு கிடைத்த அபரிமித ஆதரவு இதனைப் புலப்படுத்தும் வகையில் உள்ளது.

இந்த மருத்துவப் பரிசோதனைத் திட்டத்தில் வழக்கத்திற்கு மாறாக அதிக எண்ணிக்கையில் பொது மக்கள் கலந்து கொண்டது தமக்கு பெரும் வியப்பை அளிப்பதாக உள்ளது என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எர்டி பைசால் எடி யூசுப் கூறினார்.

இந்த இலவச மருத்துவப் பரிசோதனை இயக்கம் தொடங்கிய ஒரு மணி நேரத்தில் சுமார் 200 பேர் இதில் கலந்து கொண்டனர், முன்பு இத்தகையத் திட்டங்களுக்கு விடாது அழைப்பு விடுத்தாலும் தொகுதி மக்கள் அதனைப் புறக்கணித்து வந்தனர். ஆனால், இன்று நிலைமை தலைகீழாக உள்ளது என்றார் அவர்.

இதில் மேலும வியப்பளிக்கும் விஷயம் என்னவென்றால் முதியவர்கள் மட்டுமின்றி இளம் வயதினரும் இந்த பரிசோதனை இயக்கத்தில் பங்குகொண்டதுதான். நோய் வயது வேறுபாடின்றி அனைவரையும் தாக்கும் என்பதை அவர்கள் உணர்ந்துள்ளதை இது காட்டுகிறது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

இங்குள்ள கம்போங் பத்து 9 சமூக மண்டபத்தில் இன்று நடைபெற்ற சிலாங்கூர் சாரிங் இலவச மருத்துவ பரிசோதனை இயக்கத்தின் போது செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இன்றைய நிகழ்வுக்கு பொதுமக்கள் தந்த மகத்தான ஆதரவின் காரணமாக மீண்டும் ஒரு முறை இத்தொகுதியில் இத்தகைய மருத்துவ பரிசோதனையை ஏற்பாடு செய்வதற்குரிய சாத்தியத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் சொன்னர்.


Pengarang :