போதைப் பொருள் அடங்கிய மின் சிகிரெட் பகிரங்க விற்பனை- போலீசார் அம்பலம்

கோலாலம்பூர், நவ 3- போதைப் பொருள் அடங்கிய மின் சிகிரெட் (வேப்) திரவம் பகிரங்கமாக விற்கப்படுவதை அரச மலேசிய  போலீஸ் படை (பி.டி.ஆர்.எம்.) உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த சட்டவிரோத விற்பனையை துடைத்தொழிப்பதற்கான நடவடிக்கையில் போலீஸ் துறை தீவிரமாக ஈடுபட்டு வருவதாக பி.டி.ஆர்.எம். செயலாளர் டத்தோ நோர்ஷியா முகமது சஹாடுடின் அறிக்கை ஒன்றில் கூறினார்.

போலீஸ் துறையின் தீவிர நடவடிக்கையின் பலனாக கிள்ளான் பள்ளத்தாக்கு வட்டாரத்தில் போதைப் பொருளை மின் சிகிரெட் திரவ வடிவில் விநியோகம் செய்யும் கும்பல் ஒன்றை தாங்கள் முறியடித்துள்ளதாக அவர் சொன்னார்.

கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கையில் 34 லட்சத்து 70 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள போதைப் பொருள் மற்றும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு எழுவர் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

போதைப் பொருள் விநியோகம் மற்றும் போதைப் பொருளை தவறாக பயன்படுத்தும் நடவடிக்கைக்கு எதிராக பி.டி.ஆர்.எம். கடும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் தரப்பு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்தார்.

போதைப் பொருள் அடங்கிய மின் சிகிரெட்  இணையம் வாயிலாக பரவலாக விற்கப்படுதோடு சந்தையிலும் சாதாரணமாக கிடைப்பதாக ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டிருந்தன.


Pengarang :