MEDIA STATEMENTNATIONAL

தேர்தலில் வென்றால் சுங்கை பூலோவில் எஸ்.எம்.யு.இ. உதவித் தொகை வெ.200 ஆக அதிகரிக்கப்படும்- ரமணன் அறிவிப்பு

பெட்டாலிங் ஜெயா, நவ 16- வரும்  பொதுத் தேர்தலில் ஹராப்பான் கூட்டணி புத்ரா ஜெயாவை கைப்பற்றினால் சுங்கை பூலோ தொகுதியிலுள்ள மூத்த குடிமக்கள் நட்புறவுத் திட்ட (எஸ்.எம்.யு.இ.) பயனாளிகள் 200 வெள்ளி உதவித் தொகையைப் பெறுவர்.

அந்த உதவித் திட்ட பயனாளிகளுக்கு கூடுதலாக 100 வெள்ளி தமது தரப்பு சார்பில் வழங்கப்படும் என்று சுங்கை பூலோ தொகுதி ஹராப்பான் வேட்பாளர் டத்தோ ஆர்.ரமணன் கூறினார்.

தற்போது இத்திட்டத்தில் இடம் பெற்றுள்ள மூத்த குடிமக்களுக்கு அவர்களின் பிறந்த நாளின் போது மாநில அரசு 100 வெள்ளியை வழங்குகிறது. பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி புத்ரா ஜெயாவை வென்று நானும் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர்கள் 200 வெள்ளி உதவித் தொகையை பெறுவார்கள் என்று அவர் சொன்னார்.

நேற்று நடைபெற்ற பாயா ஜெராஸ் தொகுதியிலுள்ள மூத்த குடிமக்களுக்கு எஸ்.எம்.யு.இ. திட்ட பற்றுச் சீட்டுகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டேன். மக்களுக்கு பயனளிக்க க்கூடிய இத்திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்த முடியும் என்று நம்புகிறேன் என அவர் குறிப்பிட்டார்.

மூத்த குடிமக்களுக்கு உதவும் நோக்கில் இந்த எஸ்.எம்.யு.இ. திட்டத்தை பத்தாண்டுகளுக்கு முன்னர் மாநில அரசு தொடக்கியது. 

இல்திஸாம் சிலாங்கூர் பென்யாயாங் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக அமைந்துள்ள இத்திட்டத்தின் வாயிலாக மூத்த குடிமக்கள் தங்கள் பிறந்த நாளின் போது 100 வெள்ளிக்கான பற்றுச் சீட்டைப் பெறுகின்றனர்.  அதே வேளையில் மரண சகாய நிதியாக  1000 வெள்ளியும் வழங்கப்படுகிறது.


Pengarang :