ECONOMY

கோல லங்காட், சிப்பாங் மேம்பாட்டுத் திட்டங்களைக் கண்காணிக்கச் சிறப்புக் குழு

ஷா ஆலம், நவ 26- தென் சிலாங்கூர் ஒருங்கிணைந்த மேம்பாட்டு பிரதேசத்
திட்டத்தின் (இட்ரிஸ்) கீழ் சிப்பாங் மற்றும் கோல லங்காட்டில் மேம்பாட்டுப் பணிகள் சீராக நடைபெறுவதை உறுதி செய்ய சிறப்பு பணிக்குழு ஒன்று உருவாக்கப்படும்.

அந்த மேம்பாட்டுத் திட்டத்தை ஒருங்கிணைப்பது, கண்காணிப்பது மற்றும்
எழக்கூடிய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது போன்ற பணிகளை அந்த
சிறப்பு பணிக்குழு மேற்கொள்ளும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

அந்த மேம்பாட்டுத் திட்டப் பரிந்துரையை அமல்படுத்துவதில் உதவக்கூடிய
ஒருங்கிணைப்பாளராக இந்த குழு செயல்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மாநில சட்டமன்றத்தில் நேற்று 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்
திட்டத்தைத் தாக்கல் செய்த போது அவர் இதனைக் குறிப்பிட்டார். கடந்த ஜூலை மாதம் மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முதலாவது சிலாங்கூர் திட்டத்தில் இந்த இட்ரிஸ் திட்டம் உள்ளடங்கியுள்ளது.

ஒரு ட்ரிலியன் வெள்ளி மதிப்பீட்டில் கோல லங்காட் மற்றும் சிப்பாங் மாவட்டங்கள் மேம்படுத்தப்படும் என்று மந்திரி புசார் கூறியிருந்தார். மாநிலத்தில் பொருளாதார நடவடிக்கைகள் பரவலாகவும் சமமான அளவிலும் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்யும் நோக்கில் அவ்விரு மாவட்டங்களும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடையாளம் காணப்பட்டன.


Pengarang :