ALAM SEKITAR & CUACA

சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 48 பேர் வீடு திரும்ப அனுமதி

ஷா ஆலம், நவ 30- சிலாங்கூரிலுள்ளத் தற்காலிக வெள்ள நிவாரண
மையங்கள் நேற்று மாலை 4.00 மணிக்கு மூடப்பட்டதைத் தொடர்ந்து
அங்கு தங்கியிருந்த 48 பேர் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.

தற்போது பேராக் மாநிலத்தில் மட்டும் இரு துயர் துடைப்பு மையங்கள்
தொடர்ந்து செயல்பட்டு வரும் வேளையில் அவற்றில் 63 குடும்பங்களைச்
சேர்ந்த 216 பேர் தங்கியுள்ளதாகத் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம்
(நட்மா) கூறியது.

இம்மாநிலத்தில் மூன்றாக இருந்த வெள்ள துயர் துடைப்பு மையங்களின்
எண்ணிக்கை தற்போது இரண்டாக குறைந்துள்ளது. வெள்ளத்தால்
பாதிக்கப்பட்ட இரு மாவட்டங்களில் இதற்கு முன்னர் 233 பேர்
தங்கியிருந்தனர் என அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில்
குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, தீபகற்ப மலேசியாவின் கிழக்குக் கரை மாநிலங்களில்
வரும் டிசம்பர் 1 முதல் 3ஆம் தேதி வரையிலும் சபாவில் டிசம்பர் 1ஆம்
தேதியும் தொடச்சியாக மழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வுத்
துறை எச்சரித்துள்ளது.

இதனிடையே, இன்று காலை 10.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி
வரை கோலக் கிள்ளான் போலீஸ் நிலையத்தில் மலேசிய சுனாமி
எச்சரிக்கை சமிக்ஞை ஒலி சோதனை மேற்கொள்ளப்படும் என்று நட்மா
தெரிவித்தது.

வானிலை தொடர்பான நம்பகமான மற்றும் துல்லியமானத் தகவல்களுக்கு
மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் சமூக ஊடங்களை வலம்
வரும்படி பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


Pengarang :