NATIONAL

சிலாங்கூர் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியின் நிலை- தே.மு. தலைமைத்துவம் முடிவெடுக்கும்

ஷா ஆலம், நவ 30- மாநில அரசில் தங்களின் எதிர்காலம் குறித்து
முடிவெடுக்கும் பொறுப்பை தேசிய முன்னணி தலைமைத்துவத்திடம்
விட்டு விடுவதாக மாநில எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ரிஸாம்
இஸ்மாயில் கூறினார்.

அடுத்தக் கட்ட அறிவிப்பு வரும் வரை மாநில எதிர்க்கட்சித் தலைவர்
பொறுப்பைத் தாம் தொடர்ந்து வகித்து வரப் போவதாக சுங்கை ஆயர்
தாவார் சட்டமன்ற உறுப்பினரான அவர் சொன்னார்.

தற்போதைக்கு எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை நான் தொடர்ந்து
வகித்து வருகிறேன். சிலாங்கூர் அரசில் தேசிய முன்னணியின் நிலை
குறித்து கட்சித் தலைமைத்துவம் பிறப்பிக்கும் உத்தரவுக்காக
காத்திருக்கிறேன் என்றார் அவர்.

இதுவரை எனக்கு எந்த உத்தரவும் வழங்கப்படவில்லை. இன்னும் ஓரிரு
நாட்களில் அம்னோ தொடர்புக் குழு கூட்டம் நடைபெறவிருக்கிறது.
அக்கூட்டத்தில் இதன் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு
சாத்தியம் உள்ளது என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கூட்டரசு நிலையில் ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ள
காரணத்தால் மாநிலத்தில் எதிர்க் கட்சி தலைவரின் நிலை குறித்து
பரிசீலிக்கப்படும் என்று மாநில சட்டமன்ற சபாநாயகர் இங் சுயி லிம்
முன்னதாக கூறியிருந்தார். இவ்விவகாரம் தொடர்பில் முடிவெடுக்கும் பொறுப்பை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியிடம் விட்டு விடுவதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :