ALAM SEKITAR & CUACA

டிங்கிலில் தடுப்பணை உடைந்தது- 18 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்

ஷா ஆலம், நவ 30- டிங்கில், அம்பார் தினாங் பகுதியில் நேற்று மாலை
தடுப்பணை உடைந்து வெள்ளம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்குள்ள 18
குடும்பங்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டன.

வெளியேற்றப்பட்ட அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்க
வைக்கப்பட்டுள்ளதோடு டிங்கில் தீயணைப்பு நிலைய உறுப்பினர்கள்
நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக சிலாங்கூர் மாநில
தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை கூறியது.

பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைப்பதற்காக டேவான் ஸ்ரீ கெமிலாங்கில்
தற்காலிக நிவாரண மையம் திறக்கப்பட்டுள்ளது என்று அத்துறை தனது
டிவிட்டர் பதிவில் தெரிவித்தது.

கடும் மழை மற்றும் அருகிலுள்ள வீடமைப்பு கட்டுமானப் பகுதியிலிருந்து
பெருக்கெடுத்த நீர் ஆகிய காரணங்களால் தடுப்பணை உடைந்து 1.22
மீட்டர் அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டது. இதனால் 10 குடும்பங்கள்
பாதிக்கப்பட்டன.

இதனிடையே, அடை மழை காரணமாகக் கிள்ளாள் மாவட்டத்தின் தாமான்
மேரு ஜெயா மற்றும் மேரு ஆகிய பகுதிகளிலும் டிங்கில் தாமான்
டெலிமா ஜெயாவிலும் திடீர் வெள்ளம் ஏற்பட்டதாக மாநில தீயணைப்பு
மற்றும் மீட்புத் துறை கூறியது.

கன மழையைத் தொடர்ந்து தாமான் மேரு ஜெயாவிலுள்ள 18 வீடுகள் 0.3
மீட்டர் வெள்ளத்தில் மூழ்கியதாகவும், எனினும், குடியிருப்பாளர்கள் யாரும்
வெளியேற்றப்படவில்லை என்றும் தெரிவித்தது.


Pengarang :