HEALTH

கோவிட்-19 தடுப்பூசியைத் தயாரிப்பது மாநில அரசின் சக்திக்கு அப்பாற்பட்டது- சட்டமன்றத்தில் தகவல்

ஷா ஆலம், நவ 30- கோவிட்-19 தடுப்பூசியைத் தயாரிப்பதற்கு அதிக செலவு பிடிக்கும் என்பதோடு மாநில அரசின் சக்திக்கும் அப்பாற்பட்டது என்பதால் அத்தகையக் கண்டுபிடிப்புகளுக்கு மத்திய அமைச்சின் வலுவான நிதி ஆதரவு தேவைப்படும்  என்று மாநில சட்டமன்றத்தில் இன்று கூறப்பட்டது.

கண்டுபிடிக்கப்படும் தடுப்பு மருந்தைச் சந்தைப் படுத்துவதற்குத் தேவைப்படும் செலவினத்தையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது என்று பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

ஆகவே, தடுப்பூசி தயாரிப்பது என்பது மாநில அரசின் சக்திக்கு அப்பாற்பட்ட விஷயமாகும். எனினும் கோவிட்-19 தடுப்பூசியைத் தயாரிக்கும் முயற்சியை மலேசிய அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து வரும் என நம்புகிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

தடுப்பூசித் தயாரிப்பில் பங்கேற்க மலேசியா ஆர்வமாக உள்ளதாக முன்னாள் சுகாதார அமைச்சர் கூறியிருந்த செய்தியை தாம் வாசித்ததாக மாநிலச் சட்டமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தின் போது அவர் தெரிவித்தார்.

‘கோவிட்-19  பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து உலு கிளாங் சட்டமன்ற உறுப்பினர் ஷாரி சுங்கிப் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.


Pengarang :