ECONOMY

கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலையில் போலீஸ் சோதனை- 243 கிலோ கெத்தும் இலைகளுடன் ஆடவர் கைது

குவாந்தான், நவ 30- கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலையில் பெந்தோங்
அருகே கார் ஒன்றைச் சோதனையிட்ட போலீசார் உள்நாட்டு ஆடவர்
ஒருவரை கைது செய்ததோடு அவரிடமிருந்து 243 கிலோ கெத்தும்
இலைகளையும் கைப்பற்றினர்.

அந்த நெடுஞ்சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த குற்றத் தடுப்பு
மற்றும் சமூக பாதுகாப்பு பிரிவு போலீசார் மேற்கொண்ட சோதனையில்
அந்த 44 வயது ஆடவன் சிக்கியதோடு கெத்தும் இலைகளைக்
கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டதாக
பெந்தோங் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்ட். ஜைஹாம் முகமது
கஹார் கூறினார்.

கெடா, பெண்டாங்கில் கிலோ 10.00க்கு அந்த இலைகளை வாங்கிய
அவ்வாவடவர் தெமர்லோவில் அவற்றை கிலோ 17.00 வெள்ளி விலைக்கு
விற்றது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர்
சொன்னார்.

கைது செய்யப்படுவதற்கு முன்னர் பல முறை இந்த கெத்தும் இலைகளை
கிழக்கு கரை மாநிலங்களுக்கு கடத்தும் நடவடிக்கையில் அவ்வாடவர்
ஈடுபட்டிருக்கக் கூடும் என தாங்கள் சந்தேகிப்பதாக அறிக்கை ஒன்றில்
ஜைஹாம் தெரிவித்தார்.

அந்த ஆடவர் 1952ஆம் ஆண்டு விஷச் சட்டத்தின் 30(3)வது பிரிவின் கீழ்
விசாரணைக்காக நேற்று தொடங்கி நான்று நாட்களுக்கு தடுத்து
வைக்கப்பட்டுள்ளார் என அவர் மேலும் குறிப்பிட்டார்.


Pengarang :