ECONOMYNATIONAL

சந்தையில் முட்டைப் பற்றாக்குறை தொடர்ந்து நீடிக்கிறது

கோலாலம்பூர், டிச 1- நாடு முழுவதும் உள்ள சந்தைகளில் முட்டைக்கான
பற்றாக்குறை தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்த பற்றாக்குறை காரணமாக ஒரு சில வியாபாரிகள் முட்டை
விற்பனைக்குச் சுயமாக கட்டுப்பாட்டை விதித்துள்ளதோடு விலையையும்
உயர்த்தியுள்ளனர். இதனால் பயனீட்டாளர்கள் பெரும்
அவதிக்குள்ளாகியுள்ளனர்.

முன்பு, தினசரி 34 தட்டு முட்டைகள் கிடைத்து வந்த நிலையில் தற்போது
அந்த எண்ணிக்கை 15ஆக குறைக்கப்பட்டு விட்டதாக டத்தோ கிராமாட்
மார்க்கெட் வியாபாரியான ஹஷிம் பாஹ்ராவி (வயது 57) கூறினார்.
மற்றோரு வியாபாரியான சூ யின் முன் (வயது 53) கூறுகையில்,
முட்டைகள் கிடைப்பது அரிதாகியுள்ளதோடு அதன் விலையும் அபரிமித
உயர்வு கண்டுள்ளதாக தெரிவித்தார்.

பேராக் மாநிலத்திலும் இதே நிலைமை நிலவுகிறது. ஈப்போ
வட்டாரத்திலுள்ள சிம்மோர், ராப்பாட் செத்தியா போன்ற பகுதிகளில் உள்ள
மளிகைக் கடைகள் மற்றும் உணவகங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்
அப்பகுதியில் முட்டைப் பற்றாக்குறை நிலவுவது கண்டறியப்பட்டதாக
பேராக் மாநில பயனீட்டாளர் இயக்கத்தின் உறுப்பினரான அஸ்வானுடின்
ஹரிபுடின் கூறினார்.

சில வியாபாரிகள் முட்டை விற்பனைக்குச் சுயமாக கோட்டா முறையை
அமல்படுத்தியது தங்களுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாக
உணவக உரிமையாளர்கள் குறை கூறுகின்றனர். முட்டைகளை ஏற்றி
வரும் லோரி ஓட்டுநர்களும் முட்டை கிடைப்பதில் சிரமத்தை
எதிர்நோக்குவதாகக் கூறுகின்றனர். அப்படியே கிடைத்தாலும் அதன் விலை
அதிகமாக உள்ளது என்று அவர் சொன்னார்.


Pengarang :