HEALTH

நாட்டில் கடந்த வாரம் டிங்கி சம்பவங்கள் 11.6 விழுக்காடு அதிகரிப்பு

கோலாலம்பூர், டிச 9- நாட்டில் டிங்கி சம்பவங்களின் எண்ணிக்கை கடந்த
ஒரு வார காலத்தில் 11.6 விழுக்காடு அதிகரித்துள்ளது. கடந்த 47வது
நோய்த் தொற்று வாரத்தில் 1,734 ஆக இருந்த டிங்கி காய்ச்சலால்
பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 48வது வாரத்தில் 1,935ஆக உயர்வு
கண்டுள்ளது.

கடந்த வாரம் டிங்கி தொடர்புடைய இரு மரணச் சம்பவங்கள் பதிவானதாகச்
சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம்
அப்துல்லா கூறினார்.

கடந்தாண்டின் இதே காலக்கட்டத்தில் 24,049 டிங்கி சம்பவங்கள் நாட்டில்
பதிவாகியிருந்த வேளையில் இவ்வாண்டில் அந்த எண்ணிக்கை 142.2
விழுக்காடு அதிகரித்து 58,239 ஆகப் பதிவாகியுள்ளது என்று அவர்
சொன்னார்.

இவ்வாண்டில் இதுவரை டிங்கி காய்ச்சல் தொடர்புடைய 39 மரணச்
சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்தாண்டின் இதே காலக்கட்டத்தில் இந்த
எண்ணிக்கை 19ஆக மட்டுமே இருந்தது என்றார் அவர்.

கடந்த வாரம் டிங்கி பரவல் அதிகம் உள்ள இடங்களின் எண்ணிக்கை 24
ஆக இருந்த வேளையில் இந்த வாரம் அந்த எண்ணிக்கை 53ஆக
உயர்ந்துள்ளது. அவற்றில் 24 இடங்கள் சிலாங்கூரிலும் 16 இடங்கள்
சபாவிலும் 10 இடங்கள் கோலாலம்பூரிலும் பினாங்கு, பேராக் மற்றும்
சரவாக்கில் தலா ஒரு இடங்களும் அடையாளம் காணப்பட்டன என அவர்
தெரிவித்தார்.

இதனிடையே, 48வது நோய்த் தொற்று வாரத்தில் சிக்குன்குன்யா
நோயினால் 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நோயாளிகளில் 20 பேர்
சிலாங்கூரையும் ஒருவர் பினாங்கையும் சேர்ந்தவர்கள் என்று நோர்
ஹிஷாம் சொன்னார்.


Pengarang :