NATIONAL

துணை அமைச்சர் பதவி ஏற்க சரஸ்வதி, பவுசியா செனட்டர்களாக ஆக்கப் பட்டனர்

கோலாலம்பூர், டிச 10- கெ அடிலான் கட்சியின் உதவித் தலைவர் சரஸ்வதி கந்தசாமி மற்றும் கெ அடிலான் கட்சியின் முன்னாள் மகளிர் பிரிவுத் தலைவி பவுசியா சாலே ஆகிய இருவரும் இன்று தொடங்கி ஒரு தவணைக்குச் செனட்டர்களாக பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

இந்தப் பதவி பிரமாணச் சடங்கு இன்று காலை 9.40 மணிக்கு  நாடாளுமன்றக் கட்டிடத்தில் மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ராய்ஸ் யாத்திம் முன்னிலையில் நடைபெற்றது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று அறிவித்த 27 துணையமைச்சர்கள் பட்டியலில் சரஸ்வதியும் பவுசியாவும் இடம் பெற்றுள்ளனர். தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துறை துணையமைச்சராக சரஸ்வதியும் உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவினத் துறை துணையமைச்சராக பவுசியாவும் பொறுப்பேற்றுள்ளனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டில் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றிய போது பிரதமர் துறை துணையமைச்சராக (சமய விவகாரங்கள்) பவுசியா நியமிக்கப்பட்டிருந்தார்.

கடந்த மாதம் நடைபெற்ற 15வது பொதுத் தேர்தலில் சரஸ்வதி தாப்பா தொகுதியிலும் பவுசியா குவாந்தான் தொகுதியிலும் தோல்வி கண்டனர்.


Pengarang :