NATIONAL

போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் ஜனவரி முதல் 28,710 பேர் கைது

கோலாலம்பூர், டிச 10- இவ்வாண்டு ஜனவரி முதல் இதுவரை போதைப்பொருள் குற்றங்களை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் சிறப்பு ஓப்ஸ் தாப்பிஸ் நடவடிக்கையில் 28,710 பேரை அரச மலேசிய போலீஸ் படை கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் 16,433 போதைப் பித்தர்களும் 4,498 போதைப் பொருள் விநியோகிப்பாளர்களும் அடங்குவர் என்று அரச மலேசியப் போலீஸ் படையின் செயலாளர் டத்தோ நுர்ஷியா சாடுடின் கூறினார்.

மேலும் 3,144 பேர் 1952ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டத்தின் 39சி பிரிவின் கீழ் கைது செய்யப்பட்ட வேளையில் சிறப்பு தடுப்பு நடவடிக்கைகள் பிரிவின் கீழ் 1,966 பேரும் தடுத்து வைக்கப்பட்டனர் என்றார்.

இந்த காலக் கட்டத்தில் 1 கோடியே 98 லட்சம் வெள்ளி மதிப்புள்ள பல்வேறு வகையான 2,241 கிலோ  போதைப் பொருள் மற்றும் 4,966 லிட்டர் திரவ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.

இது தவிர, 1988ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் (சொத்து பறிமுதல்) சட்டத்தின் கீழ் 612,563 வெள்ளி மதிப்புள்ளச் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டார்.

பறிமுதல் செய்யப்பட்டச் சொத்துக்களில் 32,663 வெள்ளி ரொக்கம், 49,600 வெள்ளி மதிப்புள்ள நகைகள் மற்றும் 530,300 வெள்ளி மதிப்புள்ள வாகனங்களும் அடங்கும் என்றார் அவர்.

போதைப்பொருள் விநியோகிப்பாளர்களை அடையாளம் கண்டு கைது செய்வது, போதைப் பித்தர்களின் கூடாரங்களை அழிப்பது, தீவிரப் போதைப் பழக்கம் உள்ளவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்வது, போதைப்பொருள் குற்றங்களில் தொடர்புடையவர்களை அடையாளம் கண்டு கைது செய்வது ஆகிய  நோக்கங்களின் அடிப்படையில் இந்த சிறப்பு அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று அவர் சொன்னார்.


Pengarang :