NATIONAL

கோம்பாக் தொகுதி தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

கோம்பாக், டிச 12- அண்மையில் நடைபெற்று முடிந்த நாட்டின் 15வது பொதுத் தேர்தலில் கோம்பாக் தொகுதியில் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி மற்றும் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரிக்கு கிடைத்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் நடத்தப் பட்ட விருந்து நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

நேற்றிரவு 8.00 மணிக்குத் தொடங்கிய இந்த விருந்து நிகழ்வில் தேர்தலில் அமிருடின் ஷாரியின் வெற்றிக்காக கடுமையாகப் பாடுபட்ட தேர்தல் பணியாளர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

கடந்த 2020 மார்ச் மாதம் தொடங்கி தேர்தல் முடியும் வரை தமக்காகவும் ஹராப்பான் கூட்டணிக்காகவும் கடுமையாகப் பாடுபட்ட அனைத்துத் தரப்பினருக்கும் தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக சிலாங்கூர் மந்திரி புசாருமான அமிருடின் தெரிவித்தார்.

கோம்பாக் தொகுதியைத் தற்காத்ததன் வழி எனது தன்மானத்தை மட்டுமின்றி கெஅடிலான் கட்சியின் தன்மானத்தையும் காப்பாற்றிய கட்சியின் தேர்தல் இயந்திரம், தேர்தல் பணியாளர்கள் மற்றும் கோம்பாக் மக்களுக்கு நன்றி எனது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் குறிப்பிட்டார்.

இந்த வெற்றி பொறுப்புணர்வையும் தந்துள்ளது. நான் ஏற்கனவே கூறியதை மறுபடியும் நினைவுகூர்கிறேன். புத்ராஜெயாவிலுள்ள ஒற்றுமை அரசாங்கத்திற்கு நாம் முழு ஒத்துழைப்பை வழங்குவோம் என அவர் சொன்னார்.

நம்மைப் பிளவுப் படுத்தும் நோக்கில் நமக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பறிக்க சிலர் முயற்சி செய்கின்றனர். ஆகவே அடுத்த ஓரிரு வாரங்களில் நாம் மறுபடியும் கடுமையாக உழைக்கத் தொடங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

கடந்த மாதம் 19ஆம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் கோம்பாக் தொகுதியில் முன்னாள் அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது அஸ்மின் அலி உள்பட நான்கு வேட்பாளர்களை 12,729 வாக்குகள் பெரும்பான்மையில் தோற்கடித்து அமிருடின் வெற்றி கண்டார்.


Pengarang :