SELANGOR

வெள்ள அபாயம்- 600 பணியாளர்களுடன் தயார் நிலையில் கே.டி.இ.பி. வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம்

ஷா ஆலம், டிச 12- சிலாங்கூரில் வெள்ளத்திற்கு பிந்தையப் குப்பைகளை அகற்றும் பணியை மேற்கொள்வதற்கு கும்புலன் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மென்ட் (கே.டி.இ.பி.டபள்யு.எம்.) நிறுவனத்தின் 600 அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நோக்கத்திற்காக மாநிலம் முழுவதும் 12 நடவடிக்கை அறைகள் திறக்கப் பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ ரம்லி முகமது தாஹிர் கூறினார்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்கப்படும் இந்த நடவடிக்கை அறைகளில் தலா 50 பேர் பணியில் ஈடுபடுத்தப்பவர். வெள்ளம் ஏற்படும் பட்சத்தில் மேலும் 1,200 பணியாளர்கள் களத்தில் இறங்கி வெள்ளத்திற்கு பிந்தைய குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபடுவர் என அவர் தெரிவித்தார்.

இந்நோக்கத்திற்காக ரோரோ எனப்படும் நடமாடும் குப்பைத் தோம்பு லோரிகள், மண்வாரி இயந்திரங்கள், லோரிகள் உள்ளிட்ட 500 வாகனங்களை தயார் செய்துள்ளோம். இவை யாவும் உடனடியாக பயன்படுத்துவதற்கு ஏதுவாக எந்நேரமும் தயார் நிலையில் இருக்கும் என்று அவர் சொன்னார்.

வெள்ள பாதிப்பு ஏற்படும் இடங்கள் மற்றும் பாதிப்பு இல்லாத இடங்கள் என்ற வேறுபாடின்றி மாநிலத்திலுள்ள அனைத்து வீடமைப்பு பகுதிகளிலும் அட்டவணை கேற்ப  கால்வாய்கள் சுத்தம் செய்வதை தாங்கள் உறுதி செய்யவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

செக்சன் 25 தாமான் ஸ்ரீ மூடா பகுதியில் கால்வாய்களை துப்புரவு செய்யும் பணிக்கு முன்னுரிமை அளிக்க உள்ளோம். காரணம் இப்பகுதியில் கடந்த முறை வெள்ளம் ஏற்பட்ட போது கால்வாய் அடைப்பு காரணமாக நீர் வடிவதில் தாமதம் ஏற்பட்டது என்றார் அவர்.

 அடை மழை தொடர்ச்சியாக பெய்யும் பட்சத்தில் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள சிப்பாங், கிள்ளான் மற்றும் பெட்டாலிங் ஆகிய மாவட்டங்களில் வெள்ளம் ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக வடிகால் மற்றும் நீர்பாசனத் துறை நேற்று எச்சரித்திருந்தது.


Pengarang :