SELANGOR

100 பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வெ.15 லட்சம் நிதியுதவி- எம்.பி.ஐ. வழங்கியது

ஷா ஆலம், டிச 13- மாணவர்களின் வசதிக்காக மாநிலத்திலுள்ள சுமார் 100
பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணியை எம்.பி.ஐ.
எனப்படும் சிலாங்கூர் மந்திரி  புசார் கட்டமைப்பு இவ்வாண்டில்
மேற்கொண்டது.

பள்ளிகள் முழுமையான அடிப்படை வசதிகளைக் கொண்டிருப்பதை உறுதி
செய்வதற்காக ஆண்டு தோறும் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்திற்காக
இவ்வாண்டு 15 லட்சம் வெள்ளி செலவிடப்பட்டதாக எம்.பி.ஐ. நிறுவன
சமூக கடப்பாட்டு பிரிவுத் தலைவர் அகமது அஸ்ரி ஜைனால் நோர்
கூறினார்.

பெட்டாலிங் ஜெயா, கிளானா ஜெயா தேசிய பள்ளியில் கூரையுடன்
கூடிய நடைபாதையை நிர்மாணிப்பதற்காக கடந்த வாரம் 10,000 வெள்ளி
வழங்கப்பட்டது என்றும் அவர் சொன்னார்.

மழை காலங்களில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளியில்
எளிதான முறையில் இறக்கி விடுவதற்கும் ஏற்றிச் செல்வதற்கும் ஏதுவாக
இந்த வசதி செய்து தரப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.

இவ்வாண்டில் மாநிலத்திலுள்ள பள்ளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 15
லட்சம் வெள்ளியில் 5 லட்சம் வெள்ளித் தொகை அடிப்படை வசதிகளை
மேம்படுத்துவதற்கும் எஞ்சியத் தொகை பெற்றோர் ஆசிரியர் சங்க
நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

மாநில மக்களின் நலனுக்காக எம்.பி.ஐ. இவ்வாண்டில் 30 லட்சம் வெள்ளி
வரை செலவிட்டுள்ளது. சிலாங்கூர் இணைய தரவு சேவை, சிலாங்கூர்
டியூஷன் ராக்யாட் திட்டம், தடுப்பூசி மையங்களுக்குச் செல்வதற்கான
போக்குவரத்து கட்டணக் கழிவு, மீண்டும் பள்ளிக்குச் செல்வோம் இயக்கம்
மற்றும் தீபாவளி, கிறிஸ்துமஸ் காலங்களில் உதவி உள்ளிட்ட
திட்டங்களுக்கு அந்நிதி பயன்படுத்தப்பட்டது என்றார் அவர்.


Pengarang :