SELANGOR

வெள்ள அபாயமுள்ள இடங்களில் முன்கட்டுப்பாட்டு மையங்கள்- சிலாங்கூர் தீயணைப்புத் துறை தகவல்

ஷா ஆலம், டிச 13- மீட்புப் பணிகளை விரைந்து மேற்கொள்வதற்கு ஏதுவாக வெள்ள அபாயம் மிகுந்த மூன்று இடங்களில் முன்கட்டுப்பாட்டும்மையங்களை சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அமைத்துள்ளது.

உலு லங்காட் மாவட்டத்தின் பத்து 14 மற்றும் சுங்கை லுய் ஆகிய பகுதிகளிலும் ஷா ஆலம், தாமான் ஸ்ரீ மூடாவிலும் இந்த கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் டத்தோ நோராசாம் காமீஸ் கூறினார்.

இவ்வாண்டில் ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் வடக்கிழக்கு பருவமழை மற்றும் கடந்தாண்டு வெள்ளத்தின் போது கிடைத்த அனுபவம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இத்திட்டம் அமல்படுத்தப்படுவதாக அவர் சொன்னார்.

கடந்தாண்டு வெள்ளத்தின் போது தீயணைப்பு நிலையத்திலிருந்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு குறிப்பாக தாமான் ஸ்ரீ மூடாவுக்கு செல்வதில் ஏற்பட்ட கால தாமதம் தங்களுக்கு படிப்பினையாக அமைந்ததாக அவர் குறிப்பிட்டார்.

படகுகள் உள்ளிட்ட உபகரணங்களுடன் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு செல்லும் போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலும் மீட்பு பணிகளைத் தாமதப்படுத்துகிறது என்று அவர் கூறினார்.

ஆகவே, நாங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ள பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் கூடாரங்களை அமைத்து உறுப்பினர்களையும் படகு உள்ளிட்ட உபகரணங்களையும் தயார் நிலையில் வைத்துள்ளோம் என்றார் அவர்.

தற்போது நாங்கள் தாமான் ஸ்ரீ மூடா போன்ற வெள்ளம் அபாயம் உள்ள இடங்களுக்கு அருகில் தயார் நிலையில் இருக்கிறோம். முன்பு தீயணைப்பு நிலையங்களிலிருந்து சம்பவ இடத்திற்குச் செல்ல 30 நிமிடங்கள் தேவைப்பட்ட வேளையில் தற்போது அந்த பயண நேரம் 5 நிமிடங்களாக குறைக்கப்பட்டு விட்டது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த முன்கட்டுப்பாட்டு மையங்கள் கடந்த மாதம் தொடங்கி 24 நேரமும் இயங்கி வருவதோடு அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் 12 மணி நேர இடைவெளியில் மாற்றப்படுகின்றனர் என்றார் அவர்.


Pengarang :