NATIONAL

சமையல் எரிவாயு கலம் வெடித்ததில் இளம் பெண் படுகாயம்

ஷா ஆலம், டிச 13- சமையல் எரிவாயு கலம் திடீரென வெடித்ததில்
விரைவில் திருமணமாகவிருந்த இளம் பெண் ஒருவர் உடல் முழுவதும்
தீக்காயங்களுக்குள்ளானார். இச்சம்பவம் கெடா மாநிலத்தின் பொக்கோ
செனா, தாமான் செனா பெர்மாயில் இன்று காலை நிகழந்தது.

இன்று காலை 8.00 மணியளவில் 26 வயதுடைய அப்பெண் மீன்
பொரிப்பதற்காக அடுப்பை பற்ற வைக்க முயன்ற போது அந்த எரிவாயு
கலம் திடீரென வெடித்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் அந்த
இரட்டை மாடி வீடு கடுமையான சேதத்திற்குள்ளானதாக பெரித்தா
ஹரியான் ஏடு கூறியது.

இந்த வெடிச் சம்பவத்தில் வீட்டின் வீட்டு வளாகத்தில் நிறுத்தி
வைக்கப்பட்டிருந்த ஒரு கார் மற்றும் மோட்டார் சைக்கிளுக்கு கடும்
பாதிப்பு ஏற்பட்டது.

இவ்வெடி விபத்து தொடர்பில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து தாசேக்
குளுகோர் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து மீட்புக் குழுவினர்
சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

சம்பவ இடத்திற்கு தங்கள் குழுவினர் வருவதற்கு முன்னரே
தீக்காயங்களுக்குள்ளான பெண்ணை அண்டை வீட்டுக்காரர்கள்
மருத்துவமனைக்கு கொண்டுச் சென்று விட்டதாக தீயணைப்புத் துறையின்
உயர் அதிகாரி முகமது ஹசாம் ஹசான் கூறினார்.

வரும் ஜனவரி மாதம் திருமணம் புரியவிருந்த அந்த இளம் பெண் தன்
தம்பி மற்றும் அவரின் மனைவியுடன் அவ்வீட்டில் வசித்து வந்ததாக
கூறப்படுகிறது.


Pengarang :