NATIONAL

பயனீட்டாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மானிய முறையை உருவாக்குவீர்- பிரதமர் உத்தரவு

புத்ராஜெயா, டிச 13- பயனீட்டாளர்கள் மற்றும் தொழில்துறையினரின்
நலனைக் கருத்தில் கொண்டு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட மானிய
முறையை அமல்படுத்துவதற்கு ஏதுவாக பொருத்தமான வழி முறையை
கண்டறியும்படி அரசு துறைகளை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
பணித்துள்ளார்.

வாழ்க்கைச் செலவின அதிகரிப்பால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பி40, எம்40
தரப்பினர் மற்றும் சிறு வணிகர்கள் பயன் பெறுவதற்கு ஏதுவாக தற்போது
நடைமுறையில் இருக்கும் பெரும் பணக்காரர்கள் மற்றும் கூட்டு வர்த்தக
ஸ்தபானங்களுக்கும் பலன் தரக்கூடிய வகையிலான பரந்த மானியத்
திட்டம் மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என அவர்
வலியுறுத்தினார்.

இன்று இங்கு நடைபெற்ற வாழக்கைச் செலவின நடவடிக்கை மன்றத்தின்
கூட்டத்தின் தலைமையேற்றப் பின்னர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில்
அவர் இதனைத் தெரிவித்தார்.

உதாரணத்திற்கு, தெனாகா நேஷனல் நிறுவனம் சுமார் ஒரு கோடி
வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. அதில் சுமார் பத்து விழுக்காடாக
இருக்கும் பத்து லட்சம் பெரும் கூட்டு ஸ்தாபனங்கள் 50 விழுக்காட்டிற்கும்
மேல் மின்சார மானியத்தைப் பெறுகின்றன என்று அவர் சொன்னார்.

ஆகவே, பயனீட்டாளர்கள் மற்றும் தொழில்துறையினரின் நலனைக்
கருத்தில் கொண்டு பொருத்தமான இலக்கு நிர்ணயிக்கப்பட்ட மானியத்
திட்டத்தை அமல்படுத்துவற்கான செயல் முறையை அரசு துறைகள்
வகுக்க வேண்டும் என்றார் அவர்.

இந்த வாழ்க்கைச் செலவின நடவடிக்கை மன்றக் கூட்டத்தில் துணைப்
பிரதமர்களாக டத்தோ அகமது ஜாஹிட் ஹமிடி, டத்தோஸ்ரீ பாடிலா யூசுப்,
அமைச்சர்கள் மற்றும் அரசாங்க தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமது
ஸூக்கி அலி ஆகியோரும் கலந்து கொண்டனர்.


Pengarang :