NATIONAL

தேசியக் கொடியைத் தலைகீழாகப் பறக்கவிட்ட வங்காளதேசிக்கு வெ.3,500 அபராதம்

கிள்ளான், டிச 13- தேசிய கொடியைத் தலைகீழாகப் பறக்கவிட்ட
குற்றத்திற்காக வங்காளதேச ஆடவர் ஒருவருக்கு இங்குள்ள
மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 3,500 வெள்ளி அபராதம் விதித்தது.

அபராதத் தொகையைச் செலுத்தத் தவறும் பட்சத்தில் ஹோசேன் முகமது
டிப்லப் (வயது 27) என்ற அந்த ஆடவர் ஐந்து மாதச் சிறைத்தண்டனையை
அனுபவிக்க வேண்டும் என்று மாஜிஸ்திரேட் பி.சாருலதாக தீர்ப்பளித்தார்.
எனினும், அவ்வாடவர் அபராதத் தொகையைச் செலுத்தினார்.

கடந்த மாதம் 26ஆம் தேதி பிற்பகல் 12.40 மணியளவில் புக்கிட் ராஜா,
ஜாலான் முகிபாவிலுள்ள ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில் தேசிய
கொடியை தலைகீழாகப் பறக்கவிட்டதன் மூலம் பொது அமைதிக்கு
குந்தகம் ஏற்படும் அளவுக்கு 29 வயது ஆடவர் ஒருவருக்குச் சினத்தை
ஏற்படுத்தியதாக தொழிற்சாலை ஒன்றில் உற்பத்தி ஆப்ரேட்டராக
பணிபுரிந்து வரும் ஹோசேன் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இச்சம்பவம் தொடர்பில் அவ்வாடவர் அன்றைய தினம் இரவு 8.40
மணியளவில் வடகிள்ளான் மாவட்ட போலீஸ் நிலையத்தில் தடுத்து
வைக்கப்பட்டார்.

நாட்டை அவமதிக்கும் இச்செயலுக்காகப் படிப்பினையை வழங்கும்
வகையில் ஹோசேனுக்குக் கடுமையான தண்டனையை வழங்கும் படி
அரசுத் தரப்பில் வழக்கை நடத்திய துணை பப்ளிக் புரோசிகியூட்டர் நுருள்
ஜன்னா அய்மி நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.
இச்செய்கைக்காக மன்னிப்பு கோரிய ஹோசேன், நாட்டை தாம்
நேசிப்பதாக தனது கருணை மனுவில் கூறினார்.


Pengarang :