NATIONAL

தேர்தல் பிரசாரத்தில் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் உரை- கெடா மந்திரி புசாருக்கு எதிராக அன்வார் அவதூறு வழக்கு

கோலாலம்பூர், டிச 14- பொதுத் தேர்தலை முன்னிட்டு தம்புன் தொகுதியில் நடைபெற்ற பெரிக்கத்தான் நேஷனல் பிரச்சாரக் கூட்டத்தின் போது தாம் பண்பு நெறி இல்லாதவர் என்ற தோரணையில் கருத்துகளை வெளியிட்டதற்காக கெடா மந்திரி புசார் டத்தோஸ்ரீ முகமது சனுசி முகமது நோருக்கு எதிராக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவதூறு வழக்கு தொடுத்துள்ளார்.

இந்த வழக்கு மனுவை எஸ்.என்.நாயர் அண்ட் பார்ட்னர்ஸ் வழக்கறிஞர் நிறுவனத்தின் சார்பில் அலோர் ஸ்டார் உயர்நீதிமன்றத்தில் 75 வயதான அன்வார் நேற்று தாக்கல் செய்தார். இந்த மனுவில் அவர் 48 வயதான சனுசியை ஒரே பிரதிவாதியாக பெயர் குறிப்பிட்டுள்ளார்.

பெருந்திரளான மக்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் தம்புன் பெரிக்கத்தான் நேஷனல் வேட்பாளர் டத்தோஸ்ரீ அகமது பைசால் அஸூமுக்கு ஆதரவாக பேசிய போது கெடா மாநில பெரிக்கத்தான்  நேஷனல் தலைவருமான சனுசி இத்தகைய அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாக அன்வார் தனது மனுவில் கூறியுள்ளார்.

அந்த உரையில் அவர், அன்வார் ஏமாற்றுச் செயல் மூலம் மாமன்னரின் மன்னிப்பை பெற்றதாகவும் இவர் இன்னும் மன்னிப்பு பெறாதவர் என்றும் குற்றஞ்சாட்டியதோடு பொய்யர், நம்ப முடியாதவர், நன்னெறி இல்லாதவர், மக்கள் நம்பிக்கைத் துரோகமிழைத்தவர் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளதாக அந்த மனுவில் குறிப்படப் பட்டுள்ளது.

 பைசால் அஸூமு எனும் பேஸ்புக் பக்கத்தில் இடம் சனுசியின் இந்த உரையை 88,00 பேர் பார்த்துள்ளதோடு 531 பேர் எதிர்வினையாற்றி உள்ளனர். அதோடு 531 முறை அந்த பதிவு பகிரப்பட்டது 384 கருத்துக்களையும் பெற்றுள்ளது.

இதன் அடிப்படையில் பிரதிவாதி தமக்கு பொது இழப்பீடு, கடும் பாதிப்பு இழப்பீடு, படிப்பினை தொகையை வழங்க வேண்டும் என்பதோடு பொருத்தமானவை என நீதிமன்றம் கருதும் இதர வகை நிவாரணங்களையும் வழங்க வேண்டும் என அன்வார் அந்த மனுவில் வலியுறுத்தியுள்ளார்.


Pengarang :