SELANGOR

சிலாங்கூர் மக்களிடையே சுபிட்சத்தை வலுப்படுத்தும் முயற்சிகள் இரட்டிப்பாக்கப்படும்- மந்திரி புசார்

பெட்டாலிங் ஜெயா, டிச 14- சிலாங்கூரிலுள்ளப் பல்லின மக்களிடையே
சுபிட்சத்தை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை மாநில அரசு
வலுப்படுத்தும் அதேவேளையில் ஒருமைப்பாட்டிற்கும்
நிலைத்தன்மைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும்
அனைத்து விதமான முயற்சிகளையும் அது முறியடிக்கும்.

நிலையான பொருளாதார வளர்ச்சி, அரசியல் நிலைத்தன்மை மற்றும்
சமூகத்தின் சுபிட்சத்திற்கு ஒற்றுமையும் நல்லிணக்கமும் வலுவான
அடித்தளமாக விளங்குவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி
கூறினார்.

பல்வேறு இன மற்றும் கலாசாரத்தின் இருப்பிடமாகச் சிலாங்கூர்
விளங்குவதால் கொள்கைகளை வகுக்கும் போது எந்த இன,சமய மற்றும்
பிரிவுகளை அரசு ஒரு போதும் புறக்கணித்ததில்லை என்று அவர்
சொன்னார்.

நிலையான மேம்பாட்டு இலக்கை அடைய வேண்டுமானால் மக்களின்
ஒற்றுமைக்கும் அரசாங்கத்தின் நிலைத்தன்மைக்கும் ஊறு விளைவிக்கும்
வகையிலான எந்த செயலையும் நாம் அனுமதிக்கக் கூடாது என அவர்
குறிப்பிட்டார்.

இங்குள்ள சிவிக் சென்டரில் நேற்றிரவு நடைபெற்ற சிலாங்கூர் மாநில
நிலையிலான கிறிஸ்துமஸ் தின பொது உபசரிப்பு நிகழ்வுக்கு
தலைமையேற்று உரை நிகழ்த்திய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் மந்திரி புசாரின் துணைவியார் டத்தின்ஸ்ரீ மஸ்டியானா
முகமது, சுற்றுச் சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய்
சியான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Pengarang :