NATIONAL

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் முதல் மாமன்னர் சம்பளம் பெறவில்லை- அன்வார்

புத்ராஜெயா, டிச 14- மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா
ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா முன்பிருந்தே அதாவது கோவிட்-
19 பெருந்தொற்று பரவியது முதல் சம்பளத்தைப் பெற்றுக்
கொள்ளவில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

மக்களுக்கு மிகுந்த சுமையைத் தந்த நாட்டின் பொருளாதார நிலையைக்
கருத்தில் கொண்டு இந்த முடிவை மாமன்னர் எடுத்ததாக அவர்
சொன்னார்.

கோவிட்-19 பெருந்தொற்று பரவியது முதல் மாமன்னர் சம்பளத்தைப்
பெற்றுக் கொள்ளவில்லை என்றத் தகவலை இங்கு தெரிவிக்க
விரும்புகிறேன். எனக்கு முன்பாகவே அவர் இந்த முடிவை எடுத்திருந்தார்.
இந்த விஷயத்தை இங்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன் என்று
அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில்
அவர் தெரிவித்தார்.

தமது தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தின் மீது மக்களுக்கு
நம்பிக்கை ஏற்படும் வகையில் தாம் பிரதமர் பதவிக்கான சம்பளத்தைப்
பெற்றுக் கொள்ளப்போவதில்லை என்று அன்வார் முன்னதாக
கூறியிருந்தார்.

அன்வார் கடந்த மாதம் 24ஆம் தேதி நாட்டின் பத்தாவது பிரதமராக
பதவியேற்றுக் கொண்டார். அமைச்சர்களின் சம்பளத்தையும் 20 விழுக்காடு
குறைக்க அமைச்சரவை ஒப்புக் கொண்டது.

இதனிடையே, வரும் டிசம்பர் 19ஆம் தேதி நடைபெறவிருக்கும்
நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கொண்டு வரப்படவிருக்கும் தம்மீதான
நம்பிக்கைத் தீர்மானத்திற்கு ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் பெற்றுள்ள
அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஆதரவளிப்பர் எனத் தாம் நம்புவதாக
அன்வார் சொன்னார்.

பக்கத்தான் ஹராப்பான், பாரிசான் நேஷனல், சரவா கட்சிகளின் கூட்டணி
மற்றும் சபா கட்சிகளின் கூட்டணி ஆகியவை தங்களின் ஆதரவைப்
புலப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.


Pengarang :