ECONOMY

வெள்ள உதவிப் பணிகளுக்காகச் சமூக நல இலாகாவுக்கு வெ.70,000 நிதி- எம்.பி.ஐ. வழங்கியது

ஷா ஆலம், டிச 15- வெள்ளப் பேரிடரில் பாதிக்கப்படுவோருக்கு உதவிகளை வழங்குவதற்காக சமூக நல இலாகாவுக்கு மந்திரி புசார் கட்டமைப்பு (எம்.பி.ஐ.) 70,000 வெள்ளி வழங்கியது.

மொத்தம் 1,000 பொட்டலங்கள் அடங்கிய தூய்மை உபகரணங்கள் மற்றும் உடனடி உணவு பொருட்கள் ரூபத்தில் அந்த உதவி வழங்கப்பட்டதாக எம்.பி.ஐ. தலைமை செயல்முறை அதிகாரி நோரித்தா முகமது சீடேக் கூறினார்.

வெள்ளப் பேரிடரில் பாதிக்கப்படுவோர் உடுத்திய உடையோடு வெள்ள துயர் துடைப்பு மையங்களில் அடைக்கலம் நாடுவர் என்பதால் அவர்களுக்கு உதவும் பொருட்டு தூய்மை உபகரணங்களும் உணவுப் பொட்டலங்களும் வழங்கப்படுவதாக அவர் சொன்னார்.

பேரிடர் காலத் தேவையைக் கருத்தில் கொண்டு குளியல் சோப்பு, பல் துலக்கும் பிரஷ் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தூய்மை உபகரணப் பெட்டியும் சூடுபடுத்தி உண்ணக்கூடிய உடனடி உணவுகளும் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன என்று அவர் சொன்னார்.

நேற்று இங்கு நடைபெற்ற நிகழ்வொன்றில் சிலாங்கூர் மாநில சமூக நலத் துறை துணை இயக்குநர் முகமது ரஸூக்கி பின் சிபியிடம் வெள்ள உதவிப் பொருட்களை ஒப்படைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

வெள்ள உதவித் திட்டங்களுக்காக இவ்வாண்டில் இதுவரை ஒரு லட்சம் வெள்ளிக்கும் மேல் எம்.பி.ஐ. செலவிட்டுள்ளதாகவும் நோரித்தா குறிப்பிட்டார்.

இதனிடையே, உணவுக் கையிருப்பு குறைந்து வரும் நிலையில் வெள்ளத்தில் பாதிக்கப் படுவோருக்கு உணவுப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை எம்.பி.ஐ. தக்க நேரத்தில் மேற்கொள்வதாக முகமது ரஸூக்கி தெரிவித்தார்.

இந்த உதவியை வழங்கிய மாநில அரசுக்கு குறிப்பாக எம்.பி.ஐ.க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இப்பொருள்கள் சுங்கை பூலோவில் உள்ள வெள்ளப் பேரிடர் உதவிப் பொருள் கிடங்கில் வைக்கப்பட்டு தேவைப்படும் சமயத்தில் துயர் துடைப்பு மையங்களுக்கு அனுப்பப்படும் என அவர் சொன்னார்.


Pengarang :