ALAM SEKITAR & CUACA

சிலாங்கூரில் 4,000 பேர் வரை தங்கும் வசதி கொண்ட 47 துயர் துடைப்பு மையங்கள் – சமூக நலத் துறை தகவல்

ஷா ஆலம், டிச 15- சிலாங்கூர் மாநிலத்தில் 47 வெள்ள துயர் துடைப்பு மையங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. கடந்த நவம்பர் மாதம் திறக்கப்பட்டது முதல் நேற்று வரை அம்மையங்களில் 4,096 பேர் அடைக்கலம் நாடியிருந்தனர்.

சிப்பாங், கோல சிலாங்கூர், உலு லங்காட் ஆகியவை அதிகம் வெள்ள துயர் துடைப்பு மையங்களைக் கொண்ட மாவட்டங்களாக விளங்குவதாக சிலாங்கூர் மாநில சமூக நலத் துறையின் துணை இயக்குநர் முகமது ரஸூக்கி சிபி கூறினார்.

இவ்வாண்டில் மொத்தம் 81 துயர் துடைப்பு மையங்களை நாங்கள் திறந்திருந்தோம். அவற்றில் 47 மையங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன என்று அவர் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநிலத்தைப் பொறுத்த வரை தேவைப்படும் பட்சத்தில் உடனடியாக திறக்கக்கூடிய வசதி கொண்ட 1,229 துயர் துடைப்பு மையங்களை நாங்கள் கொண்டிருக்கிறோம் என்று அவர் சொன்னார்.

நேற்று இங்கு எம்.பி.ஐ. எனப்படும் சிலாங்கூர் மந்திரி புசார் கட்டமைப்பிடமிருந்து வெள்ள உதவிப் பொருட்களை பெற்றுக் கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைச் சொன்னார்.

இந்நிகழ்வில் சுமார் 70,000 வெள்ளி மதிப்பிலான தூய்மை உபகரணங்கள் மற்றும் உடனடி உணவுப் பொருள்களை எம்.பி.ஐ சமூக நல இலாகாவுக்கு வழங்கியது.

இதனிடையே, வெள்ளம் ஏற்படும் பட்சத்தில் அதிகாரிகளின் அறிவுறுத்தலைப் பின்பற்றி உடனடியாக துயர் துடைப்பு மையங்களுக்கு  செல்லும்படி பொது மக்களை ரஸூக்கி கேட்டுக் கொண்டார்.

துயர் துடைப்பு மையங்களில் தங்கியிருப்பவர்களுக்கு உணவு மற்றும் இதர வகை உதவிகளை சமூக நலத் துறையினால் எளிதாக வழங்க முடியும் என்றார் அவர்.


Pengarang :