ECONOMYHEALTHNATIONAL

மாநில அரசின் மலிவு விற்பனை- ஒரு மணி நேரத்திற்குள் 200 தட்டு முட்டைகள் விற்றுத் தீர்ந்தன

ஷா ஆலம், டிச 18- இங்குள்ள செக்சன் 19, டேவான் ஹார்மோனியில் இன்று காலை நடைபெற்ற மாநில அரசின் ஏசான் ராக்யாட் மலிவு விற்பனையில் ஒரு மணிக்கும் குறைவான நேரத்தில் 200 தட்டு முட்டைகள் விற்றுத் தீர்ந்தன.

அந்த பி கிரேட் முட்டைகள் சந்தையை விட மிகவும் குறைவாக அதாவது ஒரு தட்டு 10.00 வெள்ளி விலையில் விற்கப்படுவதால் பொதுமக்கள் மத்தியில் அந்த உணவு மூலப் பொருளுக்கு அதிக வரவேற்பு கிடைத்ததாக விற்பனை ஒருங்கிணைப்பாளர் முகமது ஃபாரிட் முஸ்தாபா கூறினார்.

இந்த மலிவு விற்பனையில் பங்கேற்று பொருட்கள் வாங்க பொதுமக்கள் காலை 8.00 மணி முதல் காத்திருந்த நிலையில் அவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டு கழகம் கூடுதலாக 100 தட்டு முட்டைகளை தயார் செய்தது என்று அவர் சொன்னார்.

நாங்கள் எந்த இடத்தில் மலிவு விற்பனையை நடத்தினாலும் பொது மக்கள் முட்டைக்குத்தான் அலைமோதுகின்றனர். அதிர்ஷ்டவசமாக இந்த விற்பனை இடத்திற்கு அருகிலேயே எங்களின் பொருள் சேமிப்பு கிடங்கு உள்ளதால் அந்த உணவுப் பொருளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிந்தது என்றார் அவர்.

தற்போது நாட்டில் முட்டைக்கு பற்றாக்குறை நிலவிய போதிலும் மக்களின் தேவையை பூர்த்தி செய்ய சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டு கழகம் இயன்ற அனைத்தையும் செய்யும் என அவர் குறிப்பிட்டார்.

இந்த ஏசான் ராக்யாட் திட்டத்தில் 700 கோழிகள், 200 பேக் கெம்போங் அல்லது செலாயாங் மீன்கள், 300 பேக் இறைச்சி ஆகியவற்றோடு அரிசி மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவையும் விற்பனைக்கு வைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.


Pengarang :