ANTARABANGSAMEDIA STATEMENT

உலகக்கிண்ண கால்பந்து- வெற்றியாளராக வாகை சூடியது அர்ஜெண்டினா

ஷா ஆலம், டிச 19- உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் இறுதியாட்டத்தில் நடப்பு சாம்பியனான பிரான்சை வெற்றி கண்டதன் மூலம் கிண்ணத்தை வெல்லும் 36 ஆண்டுகால கனவை அர்ஜெண்டினா பூர்த்தி செய்துள்ளது.

நேற்று  நடைபெற்ற அந்த இறுதிப் போட்டியின் முழு நேர ஆட்டத்தின் போது 3-3 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினாவும் பிரான்சும் சமநிலையில் இருந்தன. இதனைத் தொடர்ந்து வழங்கப்பட்ட பெனால்டி வழி 4-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா வெற்றி வாகை சூடியது.

ஆட்டத்தின் முதல் பாதியில் லியேனல் மெஸி மூலம் பெனால்டி வழி முதல் கோலையும் 36வது நிமிடத்தில் ஏஞ்சல் டி மரியா மூலம் இரண்டாவது கோலையும் புகுத்தி அர்ஜெண்டினா முன்னிலை வகித்தது.

ஆட்டத்தின் 80வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பிரான்ஸ் குழுவின் கைலின் எம்பப்பே அருமையாக பயன்படுத்தி முதல் கோலை புகுத்தினார். மறு நிமிடம் கைலின்  மேலும் ஒரு கோலை அடித்து கோல் எண்ணிக்கையை சமநிலைப் படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிப்பதற்கு கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. கூடுதல் நேர ஆட்டத்தின் 109 வது நிமிடத்தில் அர்ஜெண்டினா மூன்றாவது கோலை பெற்றது. ஆட்டத்தின் 118 வது நிமிடத்தில் கைலின் மேலும் ஒரு கோலை புகுத்தி ஆட்டத்தை சமப்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து வழங்கப்பட்ட பெனால்டி வாய்ப்பை பிரான்சின் இரு ஆட்டக்காரர்கள் முறையாகப் பயன்படுத்தத் தவறியதைத் தொடர்ந்து அர்ஜெண்டினா 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றியாளராக வாகை சூடியது.


Pengarang :