ECONOMYNATIONAL

வருமான வரம்பின்றி அனைத்து மாணவர்களுக்கும் வெ.150 நிதி உதவி- ஜனவரியில் வழங்கப்படும்

ஷா ஆலம், டிச 20- பெற்றோர்களின் வருமான வரம்பைக் கருத்தில் கொள்ள்ளாமல் அனைத்து மாணவர்களுக்கும் 150 வெள்ளி உதவித் தொகை வரும் ஜனவரி மாதம் வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

பெருந்தொற்று பரவல் காரணமாக விடுபட்ட தலைமுறையினரின் பிரச்சனை மற்றும் பள்ளி செல்லும் பிள்ளைகளுக்குத் தேவையான உபகரணங்களை ஏற்படு செய்ய வேண்டிய கட்டாயம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த நிதி உதவி  வழங்கப்படுவதாக அவர் சொன்னார்.

சத்துணவுத் திட்டம் மற்றும் பாடப் புத்தக விநியோகத் திட்டத்திற்குத் தேவையான செலவினம் தவிர்த்து பெற்றோர்களின் வருமான வரம்பைக் கருத்தில் கொள்ளாமல் அனைத்து மாணவர்களுக்கு வரும் ஜனவரி மாதம் பள்ளி தொடக்க உதவி நிதியாக 150 வெள்ளியை வழங்க அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

இந்த உதவித் திட்டத்திற்குப் பெற்றோர்களின் வருமான வரம்பை நிபந்தனையாக வைத்தால் நிதியளிப்பு தாமதமாகும் என்பதோடு வரும் ஜனவரி மாதத்தில் அதனை வழங்க இயலாது என அவர் கூறினார்.

மக்களின் நல்வாழ்கை உறுதி செய்வதற்காகவும் பொருளாதார நிலையை வலுப்படுத்தும் நோக்கிலும் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை அரசாங்கம் வரும் பிப்ரவரி மாதம் மீண்டும் தாக்கல் செய்யும் என்று நிதியமைச்சருமான அவர் தெரிவித்தார்.


Pengarang :