ALAM SEKITAR & CUACANATIONAL

நிலச்சரிவு- மீட்பு பணிகளை அயராது மேற்கொள்ளும் பாதுகாப்பு படையினருக்குச் சிலாங்கூர் சுல்தான் பாராட்டு

ஷா ஆலம், டிச 20- பத்தாங் காலி நிலச்சரிவில் சிக்கியவர்களைத் தேடி மீட்கும் பணியில் அயராது ஈடுபட்டு வரும் பாதுகாப்பு படையினருக்கு மேன்மை தங்கியச் சிலாங்கூர் சுல்தான் மற்றும் தெங்கு பெர்மைசூரி தம்பதியர் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

சம்பவம் நிகழ்ந்த தினம் தொடங்கி இன்று வரை அனைத்து அரசு துறைகளும் முழு தயார்நிலையையும் ஒத்துழைப்பையும் நல்கி வருவது குறித்து தாங்கள் பெருமிதம் கொள்வதாக சுல்தான் ஷராபுடின் இடரிஸ் ஷா அல்ஹாஜ் மற்றும் தெங்கு நோராஷிகின் தம்பதியர் தெரிவித்தனர்.

அனைத்து தரப்பினரின் முயற்சியையும் முழு ஈடுபாட்டையும் பெரிதும் போற்றுகிறோம். இந்த மீட்பு நடவடிக்கையின் போது சில உறுப்பினர்கள் காயமடைந்தது, நோய்வாய்ப்பட்டது மற்றும் நெருக்கடியான தருணங்களை எதிர்நோக்கியதை அறிந்து நாங்கள் கவலை கொண்டோம் என அரச பேஸ்புக் வாயிலாக வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் அவர்கள் குறிப்பிட்டனர்.

இம்மாதம் 16ஆம் தேதி முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு பணிகள் மோசமான வானிலை காரணமாக பாதிக்கப்பட்டது குறித்தும் நாங்கள் அச்சம் கொள்கிறோம் என சுல்தான் தம்பதியர் கூறினர்.

இந்த மீட்புப் பணிகள் முழுமை பெறுவதற்கு ஏதுவாக அனைத்து துறைகளையும் சேர்ந்தவர்களும் உடல் ரீதியாகவும் மனோ ரீதியாகவும் உத்வேகத்துடனும் ஒன்றுபட்டும் செயல்படுவர் எனத் தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இந்த மீட்புப் பணியில் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, மலேசிய இராணுவப் படை, மலேசியச் சிறப்பு தேடுதல் மற்றும் மீட்பு பிரிவு (ஸ்மார்ட்), பொது தற்காப்பு படை ஆகியவை ஈடுபட்டுள்ளன.

கடந்த வெள்ளிகிழமை விடிற்காலை 2.42 மணியளவில் பாத்தாங் காலி அருகே உள்ள கோதொங் ஜெயாவில் அமைந்திருக்கும் ஃபாதர்‘ஸ் ஆர்கானிக் ஃபார்ம் முகாம் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 94 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 24 பேர் உயிழந்துள்ளதாக இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள வேளையில் மேலும் 61 பேர் காப்பாற்றப்பட்டனர்.


Pengarang :