ECONOMYSELANGOR

புக்கிட் காசிங்கில் மலிவு விற்பனை- ஒரு மணி நேரத்தில் கோழி, முட்டைகள் விற்றுத் தீர்ந்தன

பெட்டாலிங் ஜெயா, டிச 21- இங்குள்ள காசிங் இண்டா அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் நேற்று நடைபெற்ற ஜெலாஜா ஏசான் ராக்யாட் அத்தியாவசியப் பொருள் மலிவு விற்பனையில் 500 கோழிகளும் 200 தட்டு முட்டைகளும் ஒரு மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்தன.

நான்காவது முறையாக நடத்தப்படும் இந்த மலிவு விற்பனையில் கலந்து
கொள்வதற்காக வட்டார மக்கள் காலை 8.30 மணி முதல் வரிசையில்
காத்திருக்கத் தொடங்கியதாகக் குடியிருப்பாளர் சங்கத் தலைவர்
கமாருள்ஸமான் ரசால் கூறினார்.

இத்திட்டத்திற்கு மக்களிடமிருந்து நல்ல ஆதரவு கிடைத்தது. அவர்கள்
காலை முதல் வரிசையில் காத்திருந்த வேளையில் காலை 11.00
மணியளவில் அனைத்துக் கோழிகளும் முட்டைகளும் விற்றுத் தீர்ந்தன
என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த விற்பனை தொடர்பில் குடியிருப்பாளர்களுக்குத் தாங்கள் வாட்ஸ்ஆப்
புலனம் மூலம் தகவல் கொடுத்ததாகக் கூறிய அவர், இத்தகைய
விற்பனை இயக்கங்கள் எதிர்காலத்திலும் இங்கு நடத்தப்பட வேண்டும் என
அவர்கள் விரும்புகின்றனர் என்றார்.

சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டிலான இந்த
மலிவு விற்பனையில் சுமார் 2,000 பேர் வரை கலந்து கொண்டதாக புக்கிட்
காசிங் தொகுதி சேவை மையத்தின் அதிகாரி ரஸ்மான் பக்ரி கூறினார்.

அதிகமான மக்கள் பயன்பெறுவதற்கு ஏதுவாக இந்த மலிவு விற்பனைத்
திட்டம் விரிவுபடுத்தப்பட வேண்டும் என மலிவு விற்பனையின்
ஒருங்கிணைப்பாளருமான அவர் தெரிவித்தார்.


Pengarang :