ECONOMYSELANGOR

மக்களின் சுமையைக் குறைப்பதில் மாநில அரசின் மலிவு விற்பனை பேருதவி

பெட்டாலிங் ஜெயா, டிச 21- மாநில அரசின் அத்தியாவசிய உணவுப்  பொருள் மலிவு விற்பனை பொது மக்களின் பொருளாதாரச் சுமையைக் குறைப்பதில் பேருதவி 
புரிகிறது. இதனைக் கருத்தில் கொண்டு பலர் இந்த மலிவு விற்பனை வாய்ப்பை நழுவவிடத் தயாராக இல்லை.
புக்கிட் காசிங் தொகுதி நிலையில் ஒவ்வொரு முறையும் நடைபெறும் இந்த மலிவு 
விற்பனையில் தாம் தவறாது கலந்து கொள்வதாக இல்லத்தரசியான நோர்ஹஸ்மா யாக்கோப் (வயது 40)  கூறினார்.

இந்த மலிவு விற்பனை வீட்டிற்கு அருகில் நடைபெறுவது மற்றும் தேவையானப் பொருள்கள் எளிதில் கிடைப்பது ஆகிய காரணங்களால் இந்த  விற்பனையில் தாம் தவறாது கலந்து கொள்வதாக அவர் சொன்னார்.

சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம் தனது முகநூலில் வெளியிடும் மலிவு விற்பனை நடைபெறும் இடங்கள் தொடர்பான விபரங்களை அறிந்து
கொள்வதாக அவர் தெரிவித்தார்.

மிகவும் மலிவான விலையில் பொருள்களை வாங்குவதற்குரிய வாய்ப்பினை வழங்கும் இந்த விற்பனைத் திட்டத்தில் பங்கேற்க தாம் ஒருபோதும் தவறியதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றம் தங்களையும் பெரிதும் பாதித்துள்ளதாக சிறிய அளவில் உணவு வியாபாரம் செய்து வரும் நோர்ஹஸ்மா தெரிவித்தார்.

புக்கிட் காசிங் சட்டமன்ற தொகுதி நிலையில் நேற்று நடைபெற்ற மாநில அரசின் மலிவு விற்பனையின் போது அவர் இதனைக் கூறினார்.

இந்த விற்பனையில் தலா 10.00 வெள்ளி விலையில் 500 கோழிகளும் ஒரு தட்டு 10.00  வெள்ளி என்ற விலையில் 300 தட்டு முட்டைகளும் தலா 10.00 வெள்ளி விலையில் 300 பேக் இறைச்சியும் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன.

இவை தவிர, 300 பாக்கெட் கெம்போங் மீன்(வெ.6.00), பத்து வெள்ளி விலையில் 300 பேக் அரிசி, 150 போத்தல் 5 கிலோ சமையல் எண்ணெய் (வெ.25.00) ஆகிய 
அத்தியாவசிய உணவுப் பொருள்களும் இங்கு விற்கப்படும்.

இவற்றோடு ஏசான் பி.கே.பி.எஸ். தயாரிப்புகளான கோதுமை மாவு, மிளகாய் சாந்து, சார்டின், பிஸ்கட், மீ உள்ளிட்ட பொருள்களும் மலிவான விலையில் விற்கப்படுகிறது.

மாநில அரசின் இந்த மலிவு விற்பனை தொடர்பான விபரங்களை  linktr.ee/myPKPS 
என்ற அகப்பக்கம் வழி அறிந்து கொள்ளலாம்.

Pengarang :