NATIONAL

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்குப் “பந்தாஸ்“ குழுவை அனுப்ப ஊராட்சி மன்றங்கள் தயார்

ஷா ஆலம், டிச 21- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்குக் குறிப்பாக கிளந்தான் மற்றும் திரங்கானுவுக்கு விரைவு மீட்பு பணிக்குழுவை (பந்தாஸ்) அனுப்ப கோல லங்காட் நகராண்மைக் கழகம் தயாராக உள்ளது.

வெள்ளத்திற்குப் பிந்தைய மீட்புப் பணிகளில் பந்தாஸ் குழு உறுப்பினர்களுக்கு ஏற்கனவே உள்ள அனுபவத்தின் அடிப்படையில் இந்த மனிதாபிமான உதவியை வழங்க தாங்கள் தயாராக உள்ளதாக நகராண்மைக் கழகத்தின் தலைவர் டத்தோ அமிருள் அஜிசான் அப்துல் ரஹிம் கூறினார்.

கடந்தக் கால அனுபவங்களின் அடிப்படையில் பதினைந்து தன்னார்வலர்களை அனுப்ப கோல லங்காட் நகராண்மைக் கழகம் தயாராக உள்ளது. மீட்பு பணிகளில் உதவுவதற்காக நாங்கள் படகு உள்ளிட்ட சாதனங்களை சொந்த செலவில் வாங்கியுள்ளோம். எங்களிடம் தற்போது ஐந்து படகுகள் உள்ளன. தேவைப்பட்டால் அவற்றை மீட்புப் பணிக்குப்
பயன்படுத்துவோம் என்றார் அவர்.

இதனிடையே, மாநிலங்கள் உதவி கோரினால் தன்னார்வலர்களையும் பந்தாஸ் குழுவினரையும் மீட்பு பணிக்கு அனுப்ப தாங்கள் தயாராக உள்ளதாக சுபாங் ஜெயா மாநகர் மன்ற டத்தோ பண்டார் டத்தோ ஜொஹாரி அனுவார் கூறினார்.

மாநில அரசின் உத்தரவைப் பொறுத்து பந்தாஸ் குழு பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு அனுப்பப்படும் எனக்கூறிய அவர், தற்போதைக்கு தங்களின் முக்கியப் பணி மாநகர் மன்ற எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வெள்ள அபாயத்தை கண்காணிப்பதாகும் என்றார்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்குத் தன்னார்வலர்களை
அனுப்புவது குறித்து கருத்துரைத்தக் கிள்ளான் நகராண்மைக் கழக வர்த்தகத்
தொடர்புப் பிரிவு இயக்குநர் நோர்பிஸா மாபிஷ், இதன் தொடர்பான
உத்தரவுக்காகத் தாங்கள் காத்திருப்பதாகச் சொன்னார்.

நாங்கள் எப்போதும் தயார் நிலையில் உள்ளதோடு வெள்ளத்திற்குப்
பிந்தையப் துப்புரவுப் பணிகளில் கவனம் செலுத்துகிறோம் என அவர்
குறிப்பிட்டார்.


Pengarang :